Skip to main content

கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் உட்பட ஐந்து பேருக்கு அரிவாள் வெட்டு! 

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

Nagappattinam liquor dealer conflict

 

நாகை அருகே சாராய வியாபாரிகளுக்குள் மோதல் ஏற்பட்டு 5 பேருக்கு அரிவாள் வெட்டு, இருசக்கர வாகனங்களுக்கு தீ என அந்தப் பகுதியே பரபரப்பாக உள்ளது. 

 

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி ஊராட்சி பெரியகூடகுடியைச் சேர்ந்தவர் அறிவழகன். அவரது மகன் தரணிகுமார் (வயது 27). சாராய வியாபாரியான இவருக்கும், பெரியமூக்கால்வட்டம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சாராய கடத்தல்காரரான காளமேகம் மகன் ஹரிஹரன் (வயது 27) என்பவருக்கும் சாராய கடத்தலில் ஏற்பட்ட தகராறு, கடும் மோதலில் முடிந்துள்ளது. 

 

ஹரிஹரன் செம்பியன் மாதேவி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் திருடி, குண்டாஸ் வழக்கில் கைதாகி சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே தரணிகுமாருக்கும், ஹரிக்கும் நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த தரணிகுமார், நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் ஹரிஹரன் நாகையில் இருந்து 10 பேர் கொண்ட கும்பலுடன் ஆயுதங்களோடு தரணிகுமார் வீடு இருக்கும் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த தரணிகுமாரின் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். 

 

இந்தத் தாக்குதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ராஜா (எ) முருகையன், செல்வராஜ் 65, ஜோதிபாஸ் 55, சுதாகர் 35, சரண்யா 33 உள்ளிட்டோர் வெட்டுக் காயங்களுடன் படுகாயம் அடைந்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பல் திருக்கண்ணங்குடி ரயில்வே கேட் அருகே நிறுத்தி இருந்த 2 இருசக்கர வாகனங்களுக்கும் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றதால், இருசக்கர வாகனங்கள் பற்றி எரிந்து அப்பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது. 

 

வெட்டு காயமடைந்த 5 நபர்களும் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்