கூரை வீட்டின் சுவர் இடிந்து விபத்து; சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

Nagapattinam Velankanni Sempiyam Mahadevi Kaviyazhagan incident

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில் நேற்று (11.12.2024) அதிகாலை முதல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வேளாங்கண்ணி அடுத்துள்ள செம்பியம் மகாதேவி என்ற கிராமத்தில் முருகன் தாஸ் என்பவர் தனது கூரை வீட்டில் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவருக்கு கவியழகன் என்ற மகன் உள்ளார். இவர் செம்பியம் மகாதேவியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்து படித்து வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில்தான் நள்ளிரவில் கவியழகன் தனது குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது பெய்த கனமழையால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கி கவியழகன் படுகாயம் அடைந்தார். மேலும் முருகன் தாஸ் மற்றும் அவரது மகளும் காயம் அடைந்தனர். அதே சமயம் இடிபாடுகளில் சிக்கியவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு கவியழகனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கவியழகன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

house incident Nagapattinam velankanni
இதையும் படியுங்கள்
Subscribe