கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையில் கடலில் உள்ள ‘கடற்களி’ கரைஒதுங்கி, கடற்கரை முழுவதும் வண்டல் நிரம்பிய பகுதியாக மாறியதால் மீனவர்கள் தங்களின் படகுகளை கடலுக்கு எடுத்து செல்லமுடியாத கையறு நிலையில் தவித்துவருகின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள மிகவும் பசுமையான கிராமம் புஷ்பவனம். ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்கவைத்த கஜா புயலால் பசுமை முழுவதும் சிதிலமடைந்த நிலையில்,தற்போது மீண்டும் அது துளிர்விட்டுவருகிறது. அதே கிராமத்தில் கடற்கரையோரம் 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. 150க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் விசைப்படகுகளை கொண்டு மீன்பிடி தொழிலிலை செய்து ஜீவனம் செய்துவருகின்றனர். மீனவ கிராமங்களிலேயே மிகவும் பின்தங்கிய கிராமமமாக இருந்துவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பேரழிவை சந்திப்பதால் அந்த மக்களின் வாழ்வில் பெரிய முன்னேற்றம் இல்லை. கஜா புயலின்போது கடற்களி குடியிருப்புவரை புகுந்து அவர்களை திணறடித்தது. படகுகள் முழுவதும் கடற்களியில் முழ்கியதால் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்கு போனது.
அதுபோலவே சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையினால் கடற்கரை பகுதியில் கடலில் உள்ள கடற்களி கரை முழுவதும் ஒதுங்கி சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு நடமாடவே முடியாத நிலையாகிவிட்டது. அதோடு மழை காலத்திற்காக மீனவர்கள் கரையோரமாக நிறுத்தி வைத்திருந்த பைபர் படகுகளை கூட தற்போது மீன்பிடி தொழிலுக்கு எடுக்கமுடியாத கையறு நிலையில் தவிக்கின்றனர். படகுகள் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் இருந்து கடல்வரை சுமார் 300 மீட்டர் தூரம்வரை கறையோரம் கடற்களி குவிந்திருப்பதால் வண்டல் நிலம்போல மாறி பைபர் படகுகளை நகர்த்த முடியாமல் தவிக்கின்றனர். வழக்கமாக ஒரு இன்ஜினோடு நகர்த்திய படகுகள் தற்பொழுது இரண்டு இன்ஜின்களை பொருத்தியும் கடற்களியில் நகர்த முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். மீனவர்கள் கூட்டமாக சென்று ஒரு பைபர் படகை போராடி 100 மீட்டர் தூரம் தள்ளி செல்வதற்குள் சோர்வடைந்து ஏமாற்றத்தோடு கரை திரும்புகின்றனர்.
அங்குள்ள மீனவர்கள் கூறுகையில், "உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த பகுதியில் உள்ள கடற்களியை அகற்ற வேண்டும். அகற்றவில்லை என்றால் குடும்பத்தோடு வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம். கடலுக்கு செல்லாததால் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதித்துவிட்டது. இதுவரையில் எந்த ஒரு அதிகாரிகளும் எங்களை வந்து பார்க்கவில்லை" என கண்ணீர் மல்க கூறுகிறார்கள்.
"மீனவர்களின் வாழ்வு என்பதே தினம் தினம் செத்துபிழைக்கும் நிலைதான். புயல், பெருமழை, உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை தாண்டி இலங்கை உள்ளிட்ட அன்னியநாட்டு கடற்படைகளாலும், கடற்கொள்ளையர்களாலும் தினம் செத்துபிழைக்கின்றனர். தினசரி ஏதாவது ஒரு பகுதி மீனவர்கள் தாக்கப்படுவதும், கைதுசெய்யப்படுவதும் என பாதிப்புகள் வாடிக்கையாகிவிட்டது. அதோடு இப்படி பட்ட இடற்பாடுகளும் அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கி போடுவது வேதனை அளிக்கிறது. அரசு உடனே கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கவேண்டும்" என்கிறார்கள் சமுக ஆர்வலர்கள்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th-7_3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th-4_12.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th-3_12.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th-5_12.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th-1_22.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th-2_17.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/th_20.jpg)