Skip to main content

காவிரி பாசனப் பகுதிகளில் பயிர்களை அழித்து குழாய்ப் பாதை அமைப்பதா? ராமதாஸ் கண்டனம்

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,                                                                                                                 ’’நாகப்பட்டினம் மாவட்டம் மாதானத்திலிருந்து நரிமனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய்யை கொண்டு செல்வதற்காக, உழவர்களின் எதிர்ப்பையும் மீறி,  குறுவை நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் காவல்துறை துணையுடன் குழாய்ப் பாதை அமைக்கும் பணிகளை கெயில் - ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. உழவர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்காமல் அத்துமீறி வயலில் நுழைந்து, பயிர்களை அழித்து, குழாய்ப் பாதை அமைப்பது கண்டிக் கத்தக்கதாகும்.

 

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையபாளையம் என்ற இடத்தில் மாதானம் திட்டம் என்ற பெயரில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் அதிக எண்ணிக்கையில் எண்ணெய்க் கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்தது. அங்கிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய்யை நரிமனத்திலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக சீர்காழியை அடுத்த மாதானத்தில் இருந்து தரங்கம்பாடி அருகிலுள்ள மேமாத்தூர் வரையிலான 29 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்ப் பாதை அமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி - கெயில் நிறுவனங்கள் திடீரென இறங்கியுள்ளன. குழாய்ப் பாதை முழுக்க முழுக்க விளை நிலங்களில் அமைக்கப்படுகிறது.

 

அந்த விளைநிலங்களில் அண்மையில் தான் குறுவை நெல் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை அழித்து விட்டு குழாய்ப்பாதையை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடவு நட்ட பயிர்களை அழிக்க வேண்டாம் என்று உழவர்கள் கெஞ்சினாலும், போராடினாலும் கூட, அவற்றைப் பற்றி கவலைப்படாமல் இராட்சத எந்திரங்களின் மூலம் பணிகளை தொடர்கின்றன. இதைக் கண்டித்து குழாய்ப்பாதை அமைக்கப்பட உள்ள 29 கி.மீ நெடுகிலும் உள்ள விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

உழவர்கள் தங்களின் வயல்களை மிகவும் புனிதமாக கருதுபவர்கள். குறுவை பருவ நெற்பயிரை நடவு நட்டு விட்டால் அவற்றை தங்களின் குழந்தைகளைப் போல அதிக பாசத்துடன் பராமரிப்பார்கள். அந்த பயிர்கள் தான் நாளைய நமது உணவை சுமந்து நிற்கும் கடவுளின் கருணைக் கருவிகளாகும். ஆனால், இத்தகைய உணர்வுகள் எதுவும் இல்லாமல் ஓ.என்.ஜி.சி & கெயில் நிறுவனங்களின் அதிகாரிகள் எந்திரமாக மாறி, உண்மையான எந்திரங்களின் உதவியுடன் பயிர்களை அழிப்பது மன்னிக்க முடியாததாகும். சில இடங்களில் உழவர்களின் கடுமையான போராட்டத்தினால் குழாய் பதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும் கூட, மற்ற இடங்களில் இந்த பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

 

ஓ.என்.ஜி.சி & கெயில் நிறுவனங்களின் செயல் உழவை அழிக்கும் செயல் என்பது ஒருபுறமிருக்க, மிகப்பெரிய நம்பிக்கை துரோகமும் ஆகும். மாதானம் பகுதியில்  6 ஆண்டுகளுக்கு முன் எண்ணெய்க் கிணறுகள் தோட்டப்பட்ட போது உழவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அந்த பகுதியில் கூடுதலாக கிணறுகள் தோண்டப்படாது என்றும், கச்சா எண்ணெய் சரக்குந்து மூலமாக மட்டுமே கொண்டு செல்லப்படும்; அதற்காக குழாய்ப் பாதை அமைக்கப்படாது என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், பின்னர் அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு,  இருவக்கொல்லை, தாண்டவன்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் கூடுதலாக 7 எண்ணெய்க் கிணறுகளை அமைத்தது. இப்போது அடுத்தக்கட்டமாக, இரண்டாவது வாக்குறுதியையும் மீறி, பயிரிடப்பட்ட நிலங்களை எண்ணெய் நிறுவனங்கள் துண்டாடுகின்றன.

 

கடந்த ஆண்டே இதற்கான முயற்சிகளில் ஓ.என்.ஜி.சி - கெயில் நிறுவனங்கள் ஈடுபட்ட போது, அதை பாமக கடுமையாக எதிர்த்தது. இத்திட்டத்தைக் கைவிடாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை பாமக நடத்தும் என்று 18.03.2018 அன்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து இந்த பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த எண்ணெய் நிறுவனங்கள், இப்போது மீண்டும் தொடங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

மாதானம் முதல் மேமாத்தூர் வரை கெயில் எண்ணெய்க் குழாய்ப் பாதை அமைப்பதால் அப்பாதை நெடுகிலும் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்படும். இதனால் பல்லாயிரம்  விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். உழவர்களின் வாழ்வாதாரங்களை பறித்து விட்டு, எண்ணெய்  குழாய்ப் பாதைகளை அமைப்பது கண்களை பறித்து விற்று விட்டு, அந்தக் காசில் கண்மை வாங்குவதற்கு இணையான அபத்தமான, அழிவுச் செயலாகும். ஏற்கனவே, காவிரி பாசன மாவட்டங்களில் 5,000 சதுர கி.மீ பரப்பளவில் 6 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி பெட்ரோக்கெமிக்கல் முதலீட்டு மண்டலம், 600 ஏக்கர் பரப்பளவில் நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் என உழவை அழிக்கும் மத்திய அரசு, எஞ்சிய நிலங்களையும் சீரழிக்க குழாய்ப்பாதை திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கிறது. இப்படி உழவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதை விட உழவர்கள் என்ற இனத்தையே ஒட்டுமொத்தமாக அழித்து விடலாம்.

 

கச்சா எண்ணெய்யை கொண்டு செல்வதற்காக மாதானம் முதல் மேமாத்தூர் வரை குழாய்ப்பாதை அமைப்பது விவசாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்திவிடும். எனவே, இனியாவது விழித்துக் கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட மத்திய அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.