Nagapattinam incident - ADMK MLA help

நாகபட்டினம் மாவட்டம் வேளாங்கன்னி பகுதியை சேர்ந்தவர் முருகன் (78). அவரது மனைவி அஞ்சம்மாள். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. கூலி வேலை செய்து பிழைத்தவர்கள் வயது முதிர்வால் கூலி வேலையும் செய்ய முடியாத நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்ட விநாயகர் ஆலயத்தில் வந்து தஞ்சமடைந்தனர்.

Advertisment

பிரசித்தி பெற்ற நீலகண்ட விநாயகர் ஆலயத்திற்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதைப் பார்த்த முதிய தம்பதி அவர்கள் கொடுக்கும் காசு, உணவுகளை பெற்று கடந்த மூன்று ஆண்டுகளாக கோயில் வளாகத்தில் தங்கிவிட்டனர். தினமும் அரசு அன்னதானத்தில் சாப்பாடு, கோயிலில் தங்குவது, செலவுக்கு பக்தர்களிடம் வாங்குவதுமாக அவர்களின் வாழ்க்கை ஓடியது.

Advertisment

இதற்கிடையில்தான் கரோனா வைரஸ் பரவலை தடுக்க கோயில்களில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்ட நிலையில் அன்னதானமும் நிறுத்தப்பட்டது. அதனால் அங்கு தங்கி இருந்த ஆதரவற்ற பலரும் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதனால் பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் தஞ்சமடைந்தனர். அப்படித்தான் முருகனும், அஞ்சம்மாளும் தஞ்சமடைந்தனர். சில நாட்கள் உணவுக்காக தவித்தவர்களுக்கு பேராவூரணி தன்னார்வலர்கள் உணவு கொடுத்து வந்தவர்.

இந்த நிலையில் இன்று காலை பேருந்து நிலையம் அருகில் உள்ள கழிவறைக்குச் சென்ற முருகன் வெளியே வரவில்லை. நீண்ட நேரமாக வெளியே வராததால் அஞ்சம்மாள் உள்ளே சென்று பார்த்தபோது முருகன் கீழே விழுந்து பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். தொட்டுப் பார்த்தால் இறந்து கிடப்பது தெரிந்தது. தனி ஆளாக பேருந்து நிலையத்தில் அவர்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து தூக்கி வந்து, ஒரு போர்வையால் போர்த்தி வைத்துவிட்டு ஒரு மாலை வாங்கி போடக்கூட வழியில்லாமல் கணவரை எங்கே அடக்கம் செய்வது? எப்படி அடக்கம் செய்வது என்று கண்ணீரோடு தனியாக நின்று கொண்டிருந்தார்.

Advertisment

இந்த தகவல் வேகமாக பரவிய நிலையில் அங்கு வந்த பேராவூரணி (அ.தி.மு.க) எம்.எல்.ஏ கோவிந்தராசு முருகன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, புதிய வேட்டியை போர்த்திவிட்டு அருகில் நின்று கொண்டிருந்த அஞ்சம்மாளிடம் உதவிக்கு பணம் கொடுத்துவிட்டு உடனே பேரூராட்சி, வருவாய் துறை அதிகாரிகளை அழைத்து முருகன் உடலை அடக்கம் செய்ய கேட்டுக் கொண்டார். அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்த பிறகு அங்கிருந்து சென்றார். தொடர்ந்து முருகன் உடல் பேராவூரணி இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆதரவற்ற நிலையில் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த முதியவருக்கு தக்க நேரத்தில் அடக்கம் செய்ய உதவிய எம்.எல்.ஏ வை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினார்கள். இது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.