
நாகை மாவட்டம் நாகூர் அடுத்த சாமந்தான் பேட்டை கடற்கரையில் வெளிநாட்டினரால் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் கரை ஒதுங்கியிருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அந்த தெப்பம் மியான்மர் நாட்டில் இருந்து ஒதுங்கியிருக்கலாம் என்கிற தொனியில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

நாகப்பட்டினத்திற்கு அடுத்துள்ளது சாமந்தான்பேட்டை மீனவ கிராமம். அங்கிருந்து 1கிலோ மீட்டர் தொலைவில் கடலில் வித்யாசமான படகு ஒன்று மிதந்துக்கொண்டிருப்பதை கண்ட அப்பகுதியை சேர்ந்த மீனவர் சிவநாதன் தனது படகை எடுத்து சென்று அதனை கட்டி இழுத்து கரைக்கு வந்துள்ளார்.
தெப்பம் போல அலங்கரிக்கப்பட்ட அந்த படகில் புத்தர் சிலைகள் மற்றும் சுவாமி வழிபாட்டு பொருட்களும் இருந்துள்ளன. வெளிநாட்டு கொடிகள் பொருந்தியும், புரியாத எழுத்துகளில் வாசகங்களும் இடம்பெற்றிருந்தது. அதனை கண்ட மீனவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நாகை வட்டாட்சியரும் காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களும் படகை ஆய்வு செய்தனர். கரை ஒதுகிங்கியது தெப்பமா? அல்லது படகா? மியான்மர் நாட்டில் இருந்து கரை ஒதுங்கியதா? என்பதுபோன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அலங்கரிக்கப்பட்டு புத்தர்சிலையுடன் ஒதுங்கிய தெப்பத்தை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி வழிபாடு செய்யத்துவங்கிவிட்டனர், இளைஞர்கள் செல்பி எடுத்தும் வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.