எமெர்ஜென்சி வார்டில் இருந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு! - நோயாளிகள் சிதறி ஓட்டம்!

தேர்தல் விரோதம் காரணமாக இரு கோஷ்டியினர் மோதிக்கொண்டதில், 5 பேர் அரிவாள் வெட்டுக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அரிவாளால் வெட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 100- க்கும் மேற்பட்டோர் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். நேற்று (06/04/2021) நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது இரு கட்சி இளைஞர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தி இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். நேற்று ஏற்பட்ட விரோதம் பகையாக மூண்டு இன்று அதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சியினரிடையே மீண்டும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

நாகை ஏழைப்பிள்ளையார் கோவில் அருகே நடைபெற்ற இந்த கோஷ்டி மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களும் கத்தி அரிவாளுடன் மோதிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தில் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த மாரியப்பன், நகுலன், குகன், நித்தியானந்தம், நாகேந்திரன் ஆகிய இளைஞர்களுக்கு தலை, கை, காது, உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது. இதையடுத்து, அவர்கள் 5 பேரும் நாகை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காயமடைந்தவர்களைப் பார்க்க வந்த உறவினர்களை மற்றொரு தரப்பினர் நாகை அரசு மருத்துவமனை எமர்ஜென்சி வார்டு உள்ளே புகுந்து அரிவாளால் வெட்டினர். அப்போது அங்கிருந்த நோயாளிகளும், பொதுமக்களும் அலறி அடித்து நாலாபுறமும் அச்சத்தில் சிதறி ஓடினர்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த பொதுமக்கள் செல்ஃபோனில் பதிவு செய்தனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை அரசு மருத்துவமனை மற்றும் ஆரியநாட்டுத்தெரு, மகாலட்சுமிநகர் ஆகிய கிராமங்களில் அதிரடிப்படை காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பொதுமக்கள் மத்தியில் அரிவாளால் வெட்டி மோதிக் கொண்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக இருக்கும்,ஆரியநாட்டுத்தெரு மற்றும் மகாலட்சுமிநகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களைத் தேடி வருகின்றனர் காவல்துறையினர்.

incident Nagai district Police investigation
இதையும் படியுங்கள்
Subscribe