Skip to main content

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

"அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி வலைகளைத் தடைசெய்யக்கூடாது", என வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 54 கிராமத்தைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

nagai collector office fishermans officers, police

நாகை மாவட்டத்தில் கடந்த பத்தாம் தேதி தடைசெய்யப்பட்ட சுருக்குவலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த நாகை கீச்சாங்குப்பம் மீனவர்களுக்கும், வெள்ளபள்ளம் சிறுதொழில் செய்யும் பைபர் படகு மீனவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட வலைகளை அனுமதிக்கக்கூடாது என ஆட்சியரிடம் மனுகொடுத்ததோடு வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி உள்ளிட்ட10 கிராம பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

nagai collector office fishermans officers, police

இந்நிலையில் சுருக்குமடி வலைகளைக் கொண்டு, கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு மனுநீதி முகாம் நாளான இன்று (16/03/2020) பழையாறு முதல் செருதூர் வரை உள்ள 54 மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகையிட வந்த மீனவர்களையும், மீனவப் பெண்களையும் போலீசார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தடுத்து நிறுத்தியதால் மீனவ பெண்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

nagai collector office fishermans officers, police

இதையடுத்து போலீசாரின் தடையை மீறி ஆட்சியர் அலுவலகம் உள்ளே புகுந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ பெண்கள்," தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அலுவலக வாசலின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மீனவப் பெண்களை அப்புறப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
 

இறுதியில் ,"உங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என போலீசாரும், அதிகாரிகளும் கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குறைதீர் கூட்டத்திற்குத் தேசியக் கொடியுடன் வந்த நபர்; ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
person who came with the national flag at the Vellore Collectorate

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில், வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக எடுத்து வந்து கொடுப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

அப்போது, திடீரென ஒருவர் தனது கையில் தேசியக் கொடியை ஏந்தி வந்து ‘வந்தே மாதரம்.. வந்தே மாதரம்...’ எனக் கூறினார். உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உங்களுடைய குறை என்ன வாங்க கலெக்டரிடம் கூறலாம் எனக் கூறியவுடன், இருங்க மனு எடுத்துட்டு வரேன் எனச் சொல்லி வேகமாகப் புறப்பட்டுச் சென்றார். ஆனால் சென்றவர் திரும்பி வரவேயில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

வெறுமன மனு குடுக்காத.. தீக்குளிப்பது போல நாடகமாடு.. - மனு எழுதிக் கொடுத்தவர் கைது

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Nellai collector office issue

 

நெல்லை கலெக்டர் அரங்கில் வழக்கம் போல் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்று மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தனர். அதுசமயம் மாவட்டத்தின் கல்லிடைக்குறிச்சி சமீபமாக உள்ள வைராவிகுளத்தைச் சேர்ந்த வள்ளியம்மை (70) என்ற மூதாட்டி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த நிலையில், அரங்கின் ஒரு பகுதியில் திடீரென தனது தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீ குளித்து தற்கொலைக்கு முயன்றது கண்டு பதறிப்போன அங்கிருந்த மக்கள் கூச்சலெழுப்பினர்.

 

உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்தனர். அதன் காரணமாக மூதாட்டி வள்ளியம்மை உடனடியாக கண்ணைத் திறக்க முடியாமல் பாதிக்கப்பட்டார்.

 

அதன்பிறகு அந்த மூதாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், “என் மகள் முருகம்மாள் மணிமுத்தாறின் மீன் பண்ணையில் வேலை செய்து வருகிறார். அவர் அரசு வேலைக்காக வெளிநபர்களிடம் 4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனா கடன் கொடுத்தவங்க என்னோட விளை நிலத்தைப் பறிக்க முயற்சி பண்ணுதாக. நா பயிர் வைக்க முடியல. போலீஸ் அதிகாரிக கிட்ட மனு குடுத்தோம் நடவடிக்கையில்ல. என்னோட நிலத்தில நா பயிர் வைக்கனும். அதனால கலெக்டரய்யாட்ட மனு குடுக்க வந்தேன். என்னோட நெலமயப் பாத்து கலெக்டர் ஆபீஸ் வெளிய மனு எழுதிக் கொடுத்த ஒரு பெண், ‘பாட்டி, வெறுமன மனுக்குடுத்தா நடவடிக்கையிராது. நீ தீக்குளிப்பது போல நாடகமாடு அப்பத்தான் மனு வேல செய்யும்’ என்று சொன்னதால் தான் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் மூதாட்டி வெள்ளந்தியாகத் தெரிவித்திருக்கிறார்.

 

அதன் பின் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே மனு எழுதிக் கொடுக்கிற கொக்கிரகுளத்தின் தங்கம் (45) என்பவரைப் பிடித்து பாளை போலீசார் விசாரணை நடத்தியதில் மூதாட்டியை தற்கொலை முயற்சிக்கு நாடகமாட தூண்டியது தெரியவரவே அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

 

அரசு அதிகாரிகளிடம் தங்களின் கோரிக்கைகளை மனுவாகக் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார்கள். நமக்கு பரிகாரம் கிடைக்கும் என்கிற அதீத நம்பிக்கையில் ஆட்சியரிடம் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வருகிறார்கள் மக்கள். தொடர்ந்து தொடர்புடைய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கையில்லையே என்கிற ஆதங்கத்திலும் வேதனையிலும் மனு போராட்டம் நடத்துகிற மக்களில் சிலர், விரக்தியில் சில விரும்பத்தகாத சம்பவமான தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுவதுண்டு. அதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே, அவர்களைத் தடுத்துக் காப்பாற்றுவதற்காகவே அங்கு பாதுகாப்பு பணியிலிருக்கும் போலீசார் அவர்களைச் சோதனையிட்ட பின்பே ஆட்சியர் அரங்கிற்குள் அனுப்பி வைக்கின்றனர்.

 

அதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் மனுக்கள் பரபரப்பான பின்பே, அதற்கான நடவடிக்கைகள் வேகமெடுக்கின்றன எனும் வேதனை  மக்களின் மனதில் பதிவதுண்டு. அதன் விளைவே இது போன்ற சம்பவங்கள். நெல்லை ஆட்சியர் அலுவலகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

 

அதிகாரிகளிடம் தங்களின் கோரிக்கைகளை மனுவாக எப்படி தெரிவிப்பது என்பதையறியாமல் அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களுக்கு, அவர்களின் கோரிக்கைகளை விரிவாக அவர்களுக்கு மனு எழுதிக் கொடுத்து அவர்களிடமிருந்து பெறும் கூலியின் மூலம் தங்கள் குடும்பங்களை காப்பாற்றுபவர்கள் ஏராளம். தமிழகத்தின் அத்தனை ஆட்சியர் அலுவலகம் முன்பும் இதே நிலைதான்.