Naam Thamizhar Katchi leader incident

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்தையா என்பவரின் மகன் கனகரெத்தினம் (வயது 46). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது திருமயத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பாசறைத் தலைவராக உள்ளார். கடந்த 2016- ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இன்று (28/03/2021) தனது சொந்த ஊரான கீரமங்கலம் வந்து தனது பெற்றோரை பார்த்துவிட்டு, பின்பு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஆலங்குடி வழியாக புதுக்கோட்டை சென்று கொண்டிருந்த போது ஆலங்குடி ஆயிப்பட்டி விலக்கு சாலை அருகே உள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கனகரெத்தினத்தை மீட்ட அப்பகுதி மக்கள், அவரை உடனடியாக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் படுகாயமடைந்திருந்த வழக்கறிஞர் கனகரெத்தினம் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். விபத்து குறித்து ஆலங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.