Skip to main content

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து நாம் தமிழர் சார்பில் போராட்டம்!

Published on 21/06/2019 | Edited on 21/06/2019


கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாக நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்கும், மண்ணிற்கும் பெரும்தீங்காக அமைந்திருக்கின்ற கூடங்குளம் அணு மின் நிலையத்தையே முற்று முழுதாக மூடக்கோரி பல ஆண்டுகளாக நாம் போராடிக்கொண்டிருக்கிற நிலையில், பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வீரியம் குறையாத கதிர்வீச்சுகளை வெளிப்படுத்தக்கூடிய அணுக்கழிவுகளை, கூடங்குளம் அணுஉலை அருகாமையிலேயே மண்ணில் புதைத்து வைத்து சேமிக்கும் திட்டம் என்பது மானுடச் சமுகத்திற்கு மட்டுமில்லாது இம்மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பேரழிவை விளைவிக்கக்கூடியது.

naam tamilar


ஏற்கனவே அழிந்து வருகிற தமிழர் நிலத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கில் கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையத்தை அமைக்க முற்படும் மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன் தலைமையில் இன்று 21-06-2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 03 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

இதில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் அ.வினோத், தமிழர் தேசிய விடுதலைக் கழகம் சார்பில் ஆ.கி.சோசப் கென்னடி, தமிழர் நலப் பேரியக்கம் சார்பில் மு.களஞ்சியம், மருது மக்கள் இயக்கம் சார்பில் செ.முத்துப்பாண்டியன் ஆகியோர் கண்டனவுரையாற்றுகிறார்கள். இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனப்பேருரையாற்றுவார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும், நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் பாசறைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் கட்சியினரும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று அணுக்கழிவு சேமிப்பு மையம் எனும் நாசகாரத் திட்டத்தை தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிப்போம் என கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்