Naam tamilar party involved in the siege struggle

பெரம்பலூரிலிருந்து அரியலூர் - தஞ்சாவூர் வழியாக மானாமதுரை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே பேரளி என்ற இடத்தில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனிடையே வாகன ஓட்டிகளின் கடுமையான எதிர்ப்பை அடுத்து கட்டணவசூல் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் இன்று (05.08.2021) முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Advertisment

அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்தத் திடீர் முற்றுகை போராட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இரட்டை வழிச் சாலையில் சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது என்று குறிப்பிட்ட நாம் தமிழர் கட்சியினர், வாகன ஓட்டிகளுக்கு எந்த வசதிகளும் சுங்கச்சாவடியில் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டினர். இந்தத் திடீர் முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி மனு கொடுத்தனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.