Naam Tamilar Party executive threat police SI

Advertisment

“என்மேல கேஸ் போட்டால்.. அண்ணன் சீமான் மேலயும் கேஸ் போடுங்க...” என நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஒருவர், போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிக்கு அருகே உள்ளது களப்பாகுளம் கிராமம். இந்த பகுதியில் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சிவசங்கரி. இந்த ஊராட்சி பகுதியில்குடிநீர் வசதி, சாலை வசதி என ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால், மக்களின் அடிப்படை தேவைகளில் கவனம் செலுத்தாத பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி, எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், சிவசங்கரியின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, நாம் தமிழர் கட்சியினர்அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதையறிந்த போலீசார், அந்த போஸ்டர்களை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி கொடியையும் அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால், போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்திற்குள் சென்ற நாம் தமிழர் கட்சியினர், பறிமுதல் செய்யப்பட்ட வால் போஸ்டரை திருப்பி கேட்டுள்ளனர்.

Advertisment

அப்போது, அங்கிருந்த தலைமை காவலர் ராசாத்தி மற்றும் உதவி ஆய்வாளர் மாரியம்மாளுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி பெண் காவலர்கள் மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொகுதி செயலாளர் பீர் முகமது, மணிகண்டன், அகரம் அச்சக உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே வேளையில், பஞ்சாயத்து தலைவருக்கு ஆதரவாககாவல்துறை செயல்பட்டு வருவதாக நாம் தமிழர் கட்சியினர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டியதற்காக, நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம், சங்கரன்கோவில் தாலுகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.