Skip to main content

சீமானின் தந்தை காலமானார்!

Published on 13/05/2021 | Edited on 13/05/2021

 

NAAM TAMILER KATCHI SEEMAN FATHER PASSED AWAY


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று (13/05/2021) பிற்பகல் காலமானார். 

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும் சீமான் இருந்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி பெரும்பாலான சட்டப்பேரவைத் தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. நடந்து முடிந்த தேர்தலில் 6 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த நிலையில், சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், அரணையூரில் உள்ள வீட்டில் அவரது தந்தை, தாய் வசித்து வந்த நிலையில், தந்தை செந்தமிழன் இன்று (13/05/2021) பிற்பகல் காலமானார். இந்த தகவலை நாம் தமிழர் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

 

சீமானின் தந்தை மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கரும்பு விவசாயி’ சின்னம் பெற்ற வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது.

Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

இத்தகைய சூழலில் திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் கந்தன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கந்தனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் சுயேட்சை என்றும் சில இடங்களில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் சுட்டிக்காட்டி கந்தனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரபு சங்கர் கரும்பு விவசாயி சின்னம் பெற்ற கட்சியின் வேட்பாளர் கந்தனின் வேட்பு மனுவை நிராகரித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். 

Next Story

ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி காலமானார்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
mdmk MP Ganesamurthy passed away

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.