Skip to main content

வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாதக வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 naam Tamil party candidate who came to file nomination in a different way

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது,  இதற்காக மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி இன்று வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பலரும் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தமிழ் நாடு முழுவதும் வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியோடு முடிவுற்றது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய மகேஷ் ஆனந்த் இன்று வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

 ad

முன்னதாக வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து மக்கான், கிரீன் சர்க்கிள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

அப்போது தாரை தப்பட்டைகள் முழங்க புலி வேஷமிட்டு நடனமாடியபடியும், அய்யன் திருவள்ளுவர், டாக்டர் அம்பேத்கர், மருது சகோதரர்கள், ராஜராஜ சோழன் போன்று வேடமிட்டு பேரணியாக வந்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'கர்நாடகாவில் நீர் இல்ல... காங்கிரஸ் பாஜகவுக்கு இங்க ஓட்டு இல்ல..'-தஞ்சையில் சீமான் பரப்புரை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'No water in Karnataka... No vote for Congress'-Seeman lobbying in Thanjavur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹிமாயூன் கபீரை ஆதரித்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், ''இங்கு வாக்குகேட்டு வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, பாஜகவின் தலைவர்களின் கருத்து என்னவாக இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது எனச் சொல்லும் கட்சிக்கு ஓட்டு கேட்டவர் முதல்வர் ஸ்டாலின். மானமிக்க, மண்ணை நேசிக்கக்கூடிய தலைவனாக இருந்தால் தண்ணி தரவில்லை, உங்களுக்கு எதற்கு ஓட்டு? கூட்டணியும் இல்லை, சீட்டு இல்லை என்று முடிவு எடுத்திருக்க வேண்டுமா வேண்டாமா? ஆனால் காங்கிரசுக்கு 10 சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்றால் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் ஒரு தமிழரின் ஓட்டும் உனக்கு இல்லை. என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும். அப்படி தோற்கடித்தால்தான், ஏன் நம்மை தோற்கடித்தார்கள் என அவர்கள் சிந்திப்பார்கள். காவிரியில் மக்களுக்கான நீரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை; கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தோம்; மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவில்லை; மீத்தேன் ஈத்தேன் என நிலத்தை நஞ்சாக்கினோம்; முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் தர மறுத்தோம் அதனால் நம்மை தோற்கடித்து விட்டார்கள் என உணர வேண்டும்.

தமிழக மக்களிடம் ஓட்டை வாங்க வேண்டும் என்றால் அவர்களுடைய உரிமைக்காக பேச வேண்டும். உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் உருவாக்காத வரை நம்முடைய உரிமையை மீட்க முடியாது. கல்வி மாநில உரிமை அதை எடுத்துட்டு போனது காங்கிரஸ். அப்போது ஆட்சியில் இருந்தது திமுக. இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் சேர்ந்து கொண்டு நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறது. ஆனால் இதை நாங்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம். மறப்பது மக்களின் இயல்பு அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. மறந்துடாத, விடாதே, அவர்களுக்கு ஓட்டு போடாதே எனச் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது.

மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் எனச் சொல்லுகிறது காங்கிரஸ். அணைக் கட்டியே தீர வேண்டும் எனச் சொல்கிறது பாஜக. இதற்கு இங்கே இருக்கின்ற பாஜக தலைவர்கள், வேட்பாளர்களின் கருத்து என்ன? பேச மாட்டார்கள். காரணம் காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனப் பாஜக சொன்னால் அங்கு காங்கிரஸ் ஜெயிக்கும். காங்கிரஸ் சொன்னால் கர்நாடகாவில் பாஜக ஜெயிக்கும். அற்ப தேர்தல் வெற்றிக்காக, பதவிக்காக மக்களின் உரிமையை பலிகொடுக்க தயாரானவர்கள் இவர்கள். என் உரிமைக்கு, உணர்வுக்கு, உயிருக்கு நிற்காத உனக்கு என் ஓட்டு எதுக்கு என்று கேள்வியை எழுப்ப வேண்டும். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத இவர்களுக்கு எதற்கு நமது வாக்கு என்ற சிந்தனை மக்களுக்கு வரவேண்டும்'' என்றார். 

Next Story

பா.ஜ.க தலைவரை எதிர்த்து பா.ஜ.க மூத்த தலைவர் சுயேட்சையாகப் போட்டி!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
karnataka bjp leader k.s.eswarappa filed nomination as independent

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அந்த வகையில், பா.ஜ.க - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

மேலும், முதற்கட்டமாக நடைபெறும் 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் கடந்த 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து, அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், கர்நாடகா முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஹவேரி மக்களவைத் தொகுதியில் தனது மகன் கே.ஈ.கந்தேஷ் போட்டியிட பா.ஜ.க தலைமைக்கு வாய்ப்பு கோரியிருந்தார். ஆனால், அம்மாநில பா.ஜ.க தலைவர் பி.ஓய்.ராகவேந்திரா, அந்த வாய்ப்பை வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்சி மீது அதிருப்தியில் இருந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா, இந்த விவகாரம் குறித்து கட்சி மேலிடத்தில் புகார் அளித்தார். ஆனால், அதுவும் பயனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக கே.எஸ்.ஈஸ்வரப்பா அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (12-04-24) தொடங்கியது. இன்று தொடங்கிய வேட்புமனு தாக்கலானது வரும் 19ஆம் தேதி வரை நடக்கிறது. இதில், கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இது பா.ஜ.க மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.