Skip to main content

சிறுமி மரணத்தில் நீடிக்கு மர்மம்! மாணவிகளிடம் விசாரணை நடத்தும் ஏ.டி.எஸ்.பி.!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

Mystery lingers in little girl's case ! ADSP  investigate students!

 

பாச்சலூர் மலைக் கிராமத்தில் படித்துவந்த ஒன்பது வயதான சிறுமி, உடல் கருகி இறந்து நான்கு நாட்கள் ஆகியும் கூட குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறிவருகிறார்கள்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரின் ஒன்பது வயது சிறுமி, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்துவந்தார். இவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு காலையில் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். அன்றைய தினமே சுமார் 12 மணி அளவில் பள்ளியின் பின்புறத்தில் தீயில் எரிந்து கருகிய நிலையில் முணுமுணுத்துக் கிடந்தார். இந்த விஷயம் அச்சிறுமியின் தந்தை சத்யராஜுக்கு தெரியவர, அவர் பதறியடித்தவாரு சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால், சிறுமியைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததைக் கண்டு பெற்றோரும் உறவினர்களும் கதறித் துடித்தனர். 

 

அதன்பிறகு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், சிறுமியின் உறவினர்கள், ‘ஒரு பச்சைக் குழந்தையை ஈவு இரக்கமின்றி எரித்துக் கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் குழந்தையின் உடலை வாங்க மாட்டோம்’ என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் எஸ்.பி. சீனிவாசனுக்கும், தொகுதி எம்.எல்.ஏ.வான ஐ.பி. செந்தில் குமாருக்கும் தெரியவே உடனே திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். 

 

Mystery lingers in little girl's case ! ADSP  investigate students!

 

அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறுமியின் பெற்றோரையும், உறவினர்களையும் சமாதானப்படுத்தி கூடிய விரைவில் குற்றவாளியைப் பிடிப்போம் என்று உறுதி கூறியதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டு, சிறுமியின் உடலை வாங்கிச் சென்று அடக்கம் செய்தனர். 

 

அதைத்தொடர்ந்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி, எஸ்.பி. சீனிவாசன், ஏ.டி.எஸ்.பி. லாவண்யா மற்றும் டி.எஸ்.பி.கள், இன்ஸ்பெக்டர்கள் என பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பாச்சலூர் மலைக் கிராமத்துக்குச் சென்று பல்வேறு கோணங்களில் அதிரடியாக விசாரணை செய்துவருகிறார்கள். இதில் முதற்கட்டமாக பள்ளி தலைமையாசிரியர் முருகன் மற்றும் மணிவேல் ராஜன், ராஜதுரை ஆகிய மூன்று ஆசிரியர்களிடம் ஒரு டீம் தீவிர விசாரணை செய்துவருகிறது. அதுபோல் டி.ஐ.ஜி. விஜயகுமாரி நேரடியாகவே விசிட் அடித்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்துவிட்டுத் திரும்பினார்.

 

Mystery lingers in little girl's case ! ADSP  investigate students!

 

இந்நிலையில், மாணவி உடல் கருகி கிடந்ததை அங்கு படிக்கக்கூடிய பெரும்பாலான மாணவர்கள் பார்த்துள்ளனர். இது அவர்களை மனதளவிலும் பாதித்துள்ளது. இதனை அறிந்த ஏ.டி.எஸ்.பி. லாவண்யா, கடந்த இரண்டு நாட்களாகப் பாச்சலூருக்குச் (சீருடை இல்லாமல் ஒரு சாதாரண பெண் போல்) சென்று அந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களைத் தாய் உள்ளத்தோடு அழைத்து தனது அருகே உள்ள சேர்களில் உட்காரச் சொல்லி, ‘நீங்கள் எத்தனாவது படிக்கிறீர்கள்? உங்களுக்கு ஆசிரியர்கள் என்னென்ன பாடங்கள் எடுக்கிறார்கள்? நீங்க நல்லா படிக்கிறீங்களா?’ என்று அன்பாகவும் பாசத்தோடும் கேட்டவாறே ‘அந்த (இறந்த) மாணவி நல்ல படிக்குமா? உங்களுக்கெல்லாம் ஃபிரண்டா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’ என்றும் ஏ.டி.எஸ்.பி. லாவண்யா விசாரணை செய்தபோது, அந்த மாணவர்களும் எந்த ஒரு பயமும் இல்லாமல் வீட்டில் பெற்றோர்கள் உறவினர்களிடம் பேசுவதுபோல் பேசினர். மேலும், ‘உடல் கருகி இறந்து கிடந்ததைப் பார்த்ததிலிருந்து எங்களுக்குப் பயமாக இருக்கிறது. இனிமேல் ஸ்கூலுக்கு எல்லாம் போக மாட்டோம்’ என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

 

ஏ.டி.எஸ்.பி. லாவண்யா, மாணவர்களடம் “அப்படியெல்லாம் சொல்லக் கூடாது; நீங்க அதை எல்லாம் மறந்துவிட்டு நல்லா படித்து கலெக்டர், டாக்டர், இன்ஜினியர் என படித்து, பல பதவிகளுக்கு வர வேண்டும்” என்று கூறி அந்த மாணவர்களின் மனநிலையை மாற்றினார். அதுபோல், “ஆசிரியர்கள் யாரும் உங்களைப் பாராட்டியிருக்கிறார்களா அல்லது அடித்திருக்கிறார்களா?” என்று கேட்டதற்கு, “மாணவர்கள் தவறு செய்தால் அடிப்பார்களே தவிர மற்றபடி எங்களை எல்லாம் ஆசிரியர்கள் அடித்ததும் இல்லை அதுபோல் எங்களோடு அன்போடு பேசும்போதும் பாராட்டும்போதும் கூட எங்களை எல்லாம் தொட்டுக்கூட ஆசிரியர்கள் பேச மாட்டார்கள்” என்று வெளிப்படையாகவே மாணவிகள் கூறியிருக்கிறார்கள். 

 

Mystery lingers in little girl's case ! ADSP  investigate students!

 

அதை தொடர்ந்து விசாரணையும் நடந்துவருகிறது. அதுபோல் பள்ளியைச் சுற்றியுள்ள வீடுகள், கடைகளில் ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தலைமையிலான பெண் போலீசார் மஃப்டியில் தீவிர விசாரணை செய்தும்வருகிறார்கள். இதில் மாணவி இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பள்ளிக்கும், டியுஷனுக்கும் போக மாட்டேன் என்று அடம்பிடித்ததாகவும் தாய் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை செய்ய இருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அதிரடி விசாரணை செய்தும் கூட மாணவி எப்படி இறந்தார்? குற்றவாளிகள் யார்? என்று தெரியாமல் மர்மமாகவே இருந்துவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்