Advertisment

ஓடும் ரயிலில் துளையிட்டு ரூ.5.78 கோடி கொள்ளையில் மர்மம் விலகுகிறது! பரபரப்பு தகவல்கள்!!

Train

சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த ரூ.5.78 கோடி கொள்ளை வழக்கில் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertisment

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி இரவு சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்டன.

Advertisment

இவ்வாறு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பழைய ரூபாய்களின் மதிப்பு மொத்தம் 342.75 கோடி ரூபாய். இந்தத் தொகை முழுவதும் 226 அட்டைப் பெட்டிகளில் பிரித்துக் கட்டப்பட்டு, அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டன.

Train

அதன்படி சேலம் இந்தியன் வங்கியில் இருந்து சேகரிக்கப்பட்ட தொகை 43 பெட்டிகளிலும், ஐஓபி வங்கிக்குச் சொந்தமான பணத்தை 83 பெட்டிகளிலும், ராசிபுரம் எஸ்பிஐ வங்கியில் இருந்து பெறப்பட்ட பணத்தை 42 பெட்டிகளிலும், கிருஷ்ணகிரி இந்தியன் வங்கியில் இருந்து சேகரிக்கப்பட்ட பணத்தை 38 பெட்டிகளிலும், சத்தியமங்கலம் எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான பணம் 20 பெட்டிகளிலும் வைக்கப்பட்டு இருந்தன.

இத்தொகை, தனியாக சரக்கு ரயிலில் அனுப்பாமல் வழக்கமான பயணிகளில் ரயிலில்தான் அனுப்பப்பட்டது. அதாவது, சம்பவத்தன்று சென்ற எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் 19 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் நடுவில் ஒரு பெட்டியில் இந்த பழைய, கிழந்த ரூபாய் தாள்கள் அடங்கிய பெட்டியும் இணைக்கப்பட்டு இருந்தது. டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் துப்பாக்கி ஏந்திய பத்து போலீசாரும் பாதுகாப்புக்கு அந்த ரயிலில் வேறு பெட்டிகளில் பயணம் செய்தனர்.

இந்தளவுக்கு முன்னெச்சரிக்கையாக செயல்பட்ட வங்கியாளர்களும், காவல்துறையினரும் மிகப்பெரும் கொள்ளை நடக்கும் என்பதை அப்போது கொஞ்சமும் யூகித்திருக்கவில்லை. சேலத்தில் புறப்பட்ட இந்த ரயில், மறுநாள் (ஆகஸ்ட் 9ம் தேதி) காலை 9 மணிக்கு எழும்பூர் சென்றடைந்தது. அங்கே சென்றதும் பணப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியை மட்டும் தனியாக பிரித்து யார்டுக்குக் கொண்டு சென்றனர்.

Train

அன்று காலை 11 மணியளவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கே சென்றனர். அந்த ரயில் பெட்டியில் ஏறிப்பார்த்தபோது நான்கு அட்டைப் பெட்டிகளின் சீல் உடைக்கப்பட்டு இருப்பதும், பணக்கட்டுகள் சிதறி இருப்பதும் தெரிய வந்தது. பெட்டியின் மேற்கூரையைப் பார்த்தபோது அங்கே இரண்டுக்கு ஒன்றரை அடி அகலத்தில் மர்ம நபர்கள் காஸ் வெல்டிங் மூலம் துளையிட்டு, பெட்டிக்குள் இறங்கி பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மர்ம நபர்கள் மொத்தம் 5.78 கோடி ரூபாய் கொள்ளையடித்துச் சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. சினிமாவை விஞ்சும் இந்த சம்பவம் பற்றி அறிந்த ஒட்டுமொத்த காவல்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். தடயவியல் நிபுணர் பஞ்சாட்சரம் தலைமையிலான குழுவினர் கொள்ளை நடந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் பதிவாகி இருந்த விரல்ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். ஆனாலும் அந்த தடயங்கள் விசாரணைக்கு போதிய அளவில் பலனளிக்கவில்லை.

எந்த இடத்தில் இந்த கொள்ளை நடத்திருக்கும் என்பதை கண்டுபிடிக்கவே உள்ளூர் போலீசார் திணறினர். சேலத்தில் ரயில் பெட்டியில் மதியம் 2.30 மணிக்கு பணப்பெட்டிகள் ஏற்றப்பட்டன. ஆனாலும், எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் இணைப்பதற்காக இரவு 9 மணி வரை 6.30 மணி நேரம் சேலம் சூரமங்கலம் ரயில் நிலையத்திலேயே காத்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சேலத்திலேயே மர்ம நபர்கள் பணத்தைக் கொள்ளை அடித்தார்களா?

அல்லது, விருத்தாசலத்தில் எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் நின்று சென்றது. அப்போது மர்ம நபர்கள் கைவரிசை காட்டினார்களா? அல்லது சென்னை சென்றபிறகு, எழும்பூர் யார்டில் பணம் அடங்கிய ரயில் பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது கொள்ளை சம்பவம் அரங்கேறியதா? என பல்வேறு கோணங்களிலும் விசாரித்தனர்.

Train

உள்ளூர் போலீசார் விசாரணையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால், இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த சம்பவத்தில் வழக்கு விசாரணை தாமதம் ஆனாலும், கொள்ளையர்களை பிடிப்பதில் தோல்வி கண்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது சிபிசிஐடி. சம்பவத்தன்று சேலம் & விருத்தாசலம் வழித்தடத்தில் பதிவான் சந்தேகத்திற்குரிய செல்போன் உரையாடல்கள், விருத்தாசலம் & சென்னை வழித்தடத்தில் பேசப்பட்ட சந்தேகத்திற்குரிய செல்போன் உரையாடல்கள் என தனித்தனியாக பிரித்து நுட்பமாக விசாரிக்கத் தொடங்கினர்.

குறிப்பிட்ட சில செல்போன் உரையாடல்கள் மீது சிபிசிஐடி தரப்புக்கு சந்தேகம் வலுத்தது. அந்த எண்களை கண்டுபிடித்து விசாரித்தபோது அந்த செல்போன் எண்கள் அனைத்தும் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது. இதையடுத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்ஐஏ புலனாய்வு ஏஜன்சி உதவியுடன் சந்தேகத்திற்குரிய செல்போன் எண்களின் உரிமையாளர்களைப் பின்தொடர்ந்தனர். அவர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் நடந்த கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதை சிபிசிஐடி போலீசார் உறுதிப்படுத்தினர்.

இந்த விசாரணையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் கூறுகின்றனர். மத்திய அரசு மூலமாக நாசாவிடம் உதவி கோரப்பட்டு உள்ளது. அவர்கள், சேலத்தில் இருந்து எழும்பூர் செல்வதற்கு இடையிலான 350 கி.மீ. தூரத்தில் சம்பவத்தன்று, நூறுக்கும் மேற்பட்ட டவர்களில் இருந்து செல்போன் உரையாடல்கள் பதிவாகி இருப்பதும், அந்த உரையாடல்களை இனம் கண்டுகொள்வதற்கும் நாசாவின் ஒத்துழைப்பு பேருதவியாக இருந்ததாக கூறுகின்றனர்.

ரயிலில் கொள்ளை அடிப்பது தொடர்பாக சந்தேகத்தற்கு உரிய 11 பேர் கொண்ட கும்பலை எந்த நேரத்திலும் நெருங்க தமிழக சிபிசிஐடி தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், எந்தப் பெட்டியில் பணம் செல்கிறது என்பது வங்கியும், பாதுகாப்புக்குச் செல்லும் போலீசாரும் மட்டுமே அறிந்த ரகசியம் என்பதால், இந்த சம்பவத்தில் வங்கி மற்றும் பாதுகாப்பு போலீசாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் புதிய கோணத்தில் விசாரிக்கத் தயாராக விட்டது சிபிசிஐடி.

salem train robbery
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe