Skip to main content

சிதம்பரம் அருகே நள்ளிரவில் குடிசைகளை கொளுத்திய மர்ம நபர்கள்!

Published on 30/01/2022 | Edited on 30/01/2022

 

n

 

சிதம்பரம் அருகே மஞ்சக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட கொடிகால் நகருக்கு செல்லும் வழியில் 40-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் செல்வி, மற்றும் பழனியம்மாள் என்பவர்களின் குடிசை வீடுகள் அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது சனிக்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் எரிந்துள்ளது. கதறல் சத்தத்தைக் கேட்டு அடித்து பிடித்து எழுந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி எரிந்தகொண்டிருந்த வீடுகளை அனைத்துள்ளனர். இதில் வீட்டின் கதவு மேற்கூரை பாதியளவிற்கு எரிந்துள்ளது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் வாஞ்சிநாதன், பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆழ்வார், பரங்கிப்பேட்டை நகர செயலாளர் வேல்முருகன், விவசாய ஒன்றிய செயலாளர் கொளஞ்சி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் காந்தி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் கட்சியினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். பின்னர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

 

இதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொடிகால் நகரில் வசிக்கும் சில இளைஞர்கள் எங்கள் பகுதி பெண்கள் வயல்பகுதி உள்ளிட்ட மறைவிடங்களுக்கு இயற்கை உபாதை கழிக்கசெல்லும் போது செல்லும்போது செல்போன் மூலம் படம் எடுத்துள்ளனர். இதுகுறித்து விபரம் அறிந்து எங்கள் பகுதியில் உள்ளவர்கள் அவர்களிடம் கேட்டதற்கு இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது  ஒருகட்டத்தில் பிரச்சனை வேண்டாம் என்று சமாதனம் ஆகிவிடுவோம் என்று முடிவெடுத்தோம்.

 

இந்தநிலையில் செல்போனில் பெண்களைப் படம் எடுத்து ரசித்தவர்களுக்கு ஆதரவாக இதே பகுதியில் வசிக்கும் மாற்றுசமூகத்தை சேர்ந்த இளைஞர் சதிஷ்குமார் என்பவர் சனிக்கிழமை பகல் நேரத்தில் எப்படி அவர்களிடம் நீங்கச் சண்டைக்குப் போகலாம் அவ்வளவு திமிர் வந்துவிட்டதா? என்று அந்தப் பகுதியில் உள்ள முகப்பில் நின்று சத்தமிட்டார். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டது. அதன்பிறகு சமாதனம் செய்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் தான் அதே இரவு எல்லாரும் தூங்கிய பிறகு நள்ளிரவு நேரத்தில் தூரல் மழை பெய்தது. குடிசை வீடு விரைவில் தீப்பற்றாது என்பதற்காகப் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றிப் பீய்ச்சு அடித்து விட்டிற்கு தீ வைத்துள்ளனர். முதலில் ஒரு வீட்டில் வைக்கப்பட்ட தீ அடுத்த வீட்டிற்கும் தாவியுள்ளது. வேறு எந்தப் பிரச்சணையும் இங்கு இல்லை. எரித்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால் இந்தச் சம்பவத்தையொட்டிதான் எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்றும் கூறுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்