பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் டெலிவரி பாயிண்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்! 

The mysterious person who showed his hand at the delivery point of the famous online company!

முசிறியில் பூட்டியிருந்த கடையின் கதவை உடைத்து ரூபாய் 2.50 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் திருடி சென்றுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறியில் துறையூர் செல்லும் சாலையில் பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் டெலிவரி பாயிண்ட் கடை அமைந்துள்ளது. பொதுமக்கள் அந்த ஆன்லைன் நிறுவனத்தின் மூலம் ஆர்டர் கொடுத்து வாங்கும் பொருட்கள் முசிறிக்கு வந்து, பின்னர் வாடிக்கையாளர்கள் கூறியுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

நேற்று கடையில் டி.வி, போன் உள்ளிட்ட பல்வேறு உயர்தரப் பொருட்கள் இருந்தது. அந்நிறுவனத்தின் டெலிவரி மையத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். காலை அந்தநிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து இருப்பதாக மேனேஜருக்கு தகவல் சென்றது. இதையடுத்து அவர் வந்து பார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த 2.50 லட்சம் ரூபாய் பணம் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த டெலிவரி மையத்தின் மேலாளர், முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் நேரில் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது நள்ளிரவு 2 மணி அளவில் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கல்லாவில் வைத்திருந்த பணத்தை திருடிச் செல்வது பதிவாகியுள்ளது. திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்காக வைத்திருந்த பொருட்கள் எதையும் எடுக்காமல்பணத்தை மட்டும் திருடிச் சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Theft trichy
இதையும் படியுங்கள்
Subscribe