Advertisment

வீடுவரை வந்து மூதாட்டியை ஏமாற்றி, நகையை திருடி சென்ற மர்ம ஆசாமி!

Mysterious person who came up to the house and cheated the old lady and stole the necklace

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூந்தலூர் கிராமம். இந்தக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி (65). இவர் நேற்று (03.08.2021) வீட்டில் தனியாக இருந்தபோது, டிப்டாப் இளைஞர் ஒருவர் ஜெயக்கொடியிடம் வெள்ளி, பித்தளை பாத்திரங்கள் மற்றும் தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டுத் தருவதாக பவ்வியமாக கேட்டுள்ளார். இதனை நம்பிய ஜெயக்கொடி, வீட்டிலிருந்த பித்தளை பொருட்களைக் கொடுத்துள்ளார். பாலீஷ் செய்து கொடுத்தபோது பளபளப்பாக இருந்துள்ளது. இதையடுத்து வெள்ளிப் பொருட்கள் இருந்தால் கொடுங்கள் என கேட்டுள்ளார். இதை நம்பி வீட்டிலிருந்த வெள்ளி பொருட்களைக் கொண்டுவந்து ஜெயக்கொடி கொடுத்தபோது அதனைபாலிஷ் செய்து கொடுத்துள்ளார்.

Advertisment

அதுவும் நல்ல பளபளப்பாக இருந்துள்ளது. இதனைப் பார்த்து வியந்துபோன ஜெயக்கொடியிடம்,“உங்கள் தங்க நகையைக் கொடுங்கள் இதேபோன்று உங்களுக்குப் புதுசாக மெருகு போட்டு தருகிறேன்” என்றுடிப்டாப் ஆசாமி கூறியுள்ளார். இதனை நம்பிய ஜெயக்கொடி, தன் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியைக் கழற்றி கொடுத்துள்ளார். டிப்டாப் மனிதன்பாலிஷ் போடுவதற்குப் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதில் நகை போடுமாறு கூறியுள்ளார். அவர் அந்தப் பாத்திரத்தில் பாலிஷ் போடுவதாக கூறி கையைப் பாத்திரத்தில் வைத்து கலக்கிக்கொண்டிருந்தார். பின்னர் ஜெயக்கொடியிடம் நகை இருந்த தண்ணீர் பாத்திரத்தை வீட்டில் உள்ள அடுப்பில் வைத்து கொதிக்க வைக்குமாறு கூறியுள்ளார்.

Advertisment

ஜெயக்கொடி அந்தப் பாத்திரத்தை எடுத்துச் சென்று அடுப்படியில் பற்ற வைத்து சூடுபடுத்த முயன்றபோது, அந்தப் பாத்திரத்தில் நகை இல்லாதது தெரியவந்தது. உடனடியாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து பார்த்தபோது டிப்டாப் ஆசாமி எஸ்கேப் ஆகியிருந்தார். இதுகுறித்து ஜெயக்கொடி உடனடியாக அக்கம் பக்கத்தினரிடம் தான் ஏமாற்றப்பட்டதைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். அவர்கள் உடனடியாக அந்த ஆசாமியைத் தேடிச் சென்றனர். அதற்குள் அந்த ஆசாமி வேறு ஒரு நபருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி மாயமாக மறைந்துள்ளார். இதையடுத்து ஜெயக்கொடி எடக்கல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் உள்ளிட்ட போலீசார் கூந்தலூர் கிராமத்திற்குச் சென்று ஜெயக்கொடியிடம் விசாரணை நடத்தியதோடு, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அதில் டிப்டாப் ஆசாமி தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு நடந்து செல்வது பதிவாகியுள்ளது. இதை வைத்து நகை ஏமாற்றிய அந்த மர்ம மனிதனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

kallakurichi chain snatching
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe