/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/theft-cctv.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது பழங்கூர். இந்தக் கிராமத்தை ஒட்டிய பகுதியாகும் குப்பத்துமேடு. இங்கு வசித்துவந்தவர் 86 வயது முதியவர் செல்வநாதன். இவர் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோய்விட்டார். இவரது பிள்ளைகள் ஒருவர் மும்பையிலும் இன்னொருவர் அரபு நாட்டிலும் வேலை செய்துவருகின்றனர். இதனால் செல்வநாதன் மட்டும் வீட்டில் தனியாக வசித்துவந்துள்ளார்.
நேற்று முன்தினம் (09.12.2021) அதிகாலை 2 மணி அளவில் அவரது வீட்டிற்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள், செல்வநாதனை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 90 ஆயிரம் பணம் 10 சவரன் நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். செல்வநாதன் கூச்சல் போட்டுள்ளார். இதையடுத்து எதிர் வீட்டில் வசித்துவந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது மர்ம நபர்கள் அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் குதித்து தப்பி ஓடியுள்ளனர். பின்னர் செல்வநாதனுக்கு கட்டப்பட்ட இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டனர்.
இதுகுறித்து நடந்த சம்பவத்தை அக்கம்பக்கத்தினரிடம் செல்வநாதன் கூறியுள்ளார். இதையடுத்து திருக்கோவிலூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். டிஎஸ்பி கங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் தடயவியல் நிபுணர் மோப்பநாய் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் பழங்கூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)