Skip to main content

தேசிய நெடுஞ்சாலை அருகே இளைஞர் மர்ம மரணம்

 

Mysterious passed away of youth near National Highway

 

விழுப்புரம் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் செல்லத்துரை(23) அப்பகுதியில் நெல் அறுவடை இயந்திர டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை நண்பர்களை பார்த்து விட்டு வருவதாகத் தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அன்று இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் உறவினர்கள் பல்வேறு இடங்களில் செல்லத்துரையை தேடியும் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை.

 

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை அரசூர் அருகே சாலை ஓரம் உள்ள யோக ஆஞ்சநேயர் பெரிய சாமி சிலை பின்புறம் ரத்தக் காயங்களுடன் செல்லத்துரை பிணமாகக் கிடந்துள்ளார். இது குறித்த தகவல் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்ததையடுத்து, சமபவ இடத்திற்குச் சென்றுள்ளனர். செல்லத்துரை உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் பிணமாகக் கிடந்ததைக் கண்டு கதறி அழுத அவரது உறவினர்கள் செல்லத்துரையை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர் என்றும் அவர்களை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செல்லத்துரையின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும், பிரேதப் பரிசோதனையில் அவர் இறப்பு குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் இது கொலையா? தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது விபரம் தெரியும். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும். கொலையாக இருந்தால் அதற்கு யார் காரணம் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தேசிய நெடுஞ்சாலை அருகே இளைஞர் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !