Skip to main content

விதவைகளை குறிவைத்து பணம், நகைகளை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்; போலீஸ் விசாரணை

Published on 30/01/2022 | Edited on 30/01/2022

 

வத

 

சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் கரோனா இறப்பை பயன்படுத்தி இறந்தவரின் தகவலை வைத்து ஒரு கும்பல் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக விதவைகளை மட்டுமே குறிவைத்து கைவரிசையை காட்டும் இந்த கும்பல் ஒரு வருட காலத்திற்கும் மேலாக போலீசுக்கு சவாலாய் இருந்து வருகின்றது. குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள் சனிக்கிழமையென்று சிதம்பரம் அடுத்த சி.வீரசோழகன் பகுதியை சேர்ந்த சமீபத்தில் கணவரை இழந்தவர் கொளஞ்சி(55) இவரது வீட்டிற்குள் அனுமதி இன்றி புகுந்த இரண்டு முகம் தெரியாத நபர்கள், வீட்டில் தனியாக இருந்த கொளஞ்சியிடம் தாங்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்திருப்பதாகவும், விதவை உதவித்தொகை வேண்டி நீங்கள் கேட்ட விண்ணப்பம் விசாரணையில் இருக்கிறது. 

 

அதனை சரி செய்தால் இன்று மாலையே உங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும் அது சம்பந்தமாகதான் வந்துள்ளோம். என தெரிவித்து ரூ.4 ஆயிரம் பணத்தை ரொக்கமாக கேட்டுள்ளனர். பணம் தன்னிடம் இல்லை என தெரிவித்த பிறகும் தொடர்ந்து நம்பும்படியாக பேசி அவரிடம் இருந்து 1 சவரன் தங்கநகை, மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை லாவகமாக வாங்கி சென்றுள்ளனர். 

 

அவர்கள் சென்ற பின்பு இயல்பு நிலைக்கு திரும்பிய அவர் ஏமாற்றப்பட்டோம் என தெரிந்து சம்பந்தப்பட்ட பெண் கொளஞ்சி சிதம்பரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதேபோல பொங்கல் விழா அன்று சிதம்பரம் அடுத்த அய்யனூர் காளியம்மன் கோவில் தெருவில் இதே கும்பல் சென்று 5 பெண்களிடம் விதவை உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி தலா ரூ.1000 வசூல் செய்து சென்ற சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்