Skip to main content

நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள்... கத்தியைக் காட்டி பணம், நகை கொள்ளை...

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

Mysterious  entered the house and robbery

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ளது அணிலாடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாயராஜ், வயது 50. தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வசந்தி, அருகிலுள்ள தொரப்பாடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

 

தற்போது, ஜெயங்கொண்டான் கிராமத்துக்கு உட்பட்ட விநாயகபுரம் கூட்டு ரோட்டில், புதிதாக வீடுகட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு மாடியில் தனியார்ப் பள்ளியில் பணி புரியும் முதல்வர் மேரி சார்லஸ் என்பவர், வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சகாயராஜ் வீட்டின் மேல் மாடிக்கு, முகமூடி அணிந்துசென்ற ஐந்து மர்மநபர்கள், மாடிப்படியில் அமைக்கப்பட்டிருந்த கிரில் கதவை உடைத்துள்ளனர். 

 

இந்தச் சத்தம் கேட்டு மாடியில் குடியிருந்த மேரி சார்லஸ், வீட்டு உரிமையாளர் சகாயராஜுக்கு செல்ஃபோனில் தொடர்பு கொண்டு தகவல் கூறியுள்ளார். சகாயராஜ் சுதாரித்து வெளியேவந்து பார்ப்பதற்குள், கொள்ளை கும்பல் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்துவிட்டனர். பின்னர், கத்தியைக் காட்டி மிரட்டி, சகாயராஜ் அவரது மனைவி, மகன்கள் உட்பட அனைவரையும் ஒரே இடத்தில் அமர வைத்துள்ளனர். 


அடுத்து, அவர்கள் அணிந்திருந்த 10 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டதோடு, பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். கொள்ளைப்போன நகை, பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம். இதுகுறித்து சகாயராஜ் செஞ்சி போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன், செஞ்சி இன்ஸ்பெக்டர் அன்பரசு, சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் குருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டுத் தீவிர விசாரணை நடத்தினர். 

 

Mysterious  entered the house and robbery

 

மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தடய அறிவியல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது தொடர்பாக செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. 

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, செஞ்சி தனியார் வங்கியில் ரூ.6 லட்சம் பணத்துடன் ஒரு லாக்கரையே கொள்ளையர்கள் தூக்கிச் சென்றுள்ளனர். இதுபோன்று தொடர் கொள்ளை சம்பவங்கள் இப்பகுதியில் நடந்துவருவதால், பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்