Skip to main content

அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் மர்ம மரணம்! போலீஸ் விசாரணை! 

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

Mysterious death of government school teacher's husband! Police investigation!

 

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்பேட்டையைச் சேர்ந்தவர் ராயப்பன் (50). விவசாயியான இவருக்கு, கில்டா ராணி என்ற மனைவியும், 12ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். கில்டா ராணி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்துவருகிறார். 

 

இந்நிலையில், நேற்று (17.11.2021) பள்ளிக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பிய கில்டா ராணி, கணவர் ராயப்பன் வீட்டில் இல்லாததைக் கண்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார். ஆனால், அவர்களுக்கும் சரியான தகவல் கிடைக்காததால், பள்ளிக்குச் சென்று திரும்பிய தனது மகளிடம் தந்தை குறித்து கேட்டுள்ளார். அவரும் தந்தையைப் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். இரவு ஏழு மணி கடந்தும் ராயப்பன் வீட்டுக்கு வராததால், கில்டா ராணி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் ராயப்பனை தேடினார்.

 

இந்நிலையில், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அந்தோனியார் புறம் தானியக் கிடங்கு பகுதியில் ராயப்பன் மர்மமான முறையில் இறந்துகிடப்பதாக அவரது மனைவிக்குத் தகவல் கிடைத்தது. அதைடுத்து, கில்டா ராணி மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு ராயப்பன் இறந்துகிடந்தார். அதனைக் கண்ட அவர்கள் கதறி அழுதனர். மேலும், ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

 

அத்தகவலின் பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்துகிடந்த ராயப்பன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன்பிறகு ராயப்பன் மனைவி ஆசிரியை கில்டா ராணி அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா ஆகியோர் வழக்குப் பதிவுசெய்தனர். மேலும், ராயப்பன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், ஆண்டிமடம் பகுதியில் இருக்க வேண்டிய ராயப்பன், ஸ்ரீமுஷ்ணம் எதற்காக வந்தார். அவராக வந்தாரா அல்லது யாரேனும் அழைத்துவந்து கொன்றனரா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்