Skip to main content

திண்டுக்கல் அருகேயுள்ள நூல்மில்களில்  மர்ம மரணங்கள்!!!

Published on 19/12/2018 | Edited on 19/12/2018
dindigul spinning mills

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் தொகுதியில் 50க்கும் மேற்பட்ட நூல்மில்கள் உள்ளன. இந்த நூல்மில்களில் திண்டுக்கல் மற்றும் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆண், பெண் கூலித் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அதோடு வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்களும் இந்த நூல்மில்களில் வேலை பார்த்து வருகிறார்கள். இப்படி வெளியூர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து வேலை பார்க்கும் ஆண், பெண் கூலி தொழிலாளர்களுக்கு அந்தந்த நூல்மில்களிலேயே தங்கவைக்கப்படுகிறார்கள்.
 

வேடசந்தூர் அருகே உள்ள எவரெடி ஸ்பின்னிங் மில்லில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொரட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் தனது மகள் விஜய லட்சுமியை (வயது19) கடந்த  6 மாதங்களுக்கு முன்பு இந்த எவரெடி நூல்மில்லில் வேலைக்கு சேர்த்துள்ளார். அதன் அடிப்படையில் விஜயலட்சுமியும் மில்லில் தங்கிக் கொண்டு இரண்டாம் யூனிட்டில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில்தான் விடுதியில்  தங்கி உள்ள விஜயலட்சுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், உடனே திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்ததாகவும், அது பலனளிக்காமல் விஜயலட்சுமி திடீரென இறந்ததாகவும் எவரெடி  நிர்வாகம் கூறியுள்ளனர். இறந்துபோன விஜயலட்சுமியை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்துவிட்டு பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
 

அதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனே பதறியடித்துக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்து பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த விஜயலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்பொழுது விஜயலட்சுமியின் காதிலும், மூக்கிலும் ரத்தம் வந்து இருப்பதை பார்த்து என் பிள்ளையை சாகடித்து விட்டீர்கள், எங்கள் பாவம் உங்களை சும்மா விடாது என்று கூறி கதறி அழுதனர். அதற்குள் அங்கிருந்த போலீசார் விஜயலட்சுமியின் பெற்றோர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன்பின் விஜயலட்சுமியின் பெற்றோர்களும் என் மகள் இறப்பில் சந்தேகம் இருக்கிறது என்று கூறியும் கூட போலீசார் அதை கண்டுகொள்ளாமல் மில் நிர்வாகத்தினரின் புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார் என்று கூறி வழக்கு பதிவு செய்து விஜயலட்சுமியின் சாவில் உள்ள மர்மத்தையும் மூடிமறைத்து விட்டனர்.


 

dindigul spinning mills


 

இதுசம்பந்தமாக மில் தொழிலாளர்கள் சிலரிடம் கேட்டபோது.... இப்பகுதிகளில் உள்ள மில்களில் வேலை பார்க்கும் ஆண் தொழிலாளர்களுக்கும், பெண் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு என்பது கிடையாது. நேற்றுவரை அந்த விஜயலட்சுமி நல்ல முறையில் தான் வேலைக்கு வந்து போனார், அப்படி இருக்கும்போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக எவரெடி நிர்வாகம் ஒரு பொய்யான தகவலை பரப்பி இருக்கிறது. அந்த பெண்ணுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் உடனே பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு வந்து சிகிச்சை அளித்திருக்க வேண்டும். அதுதான் விதிமுறையும் கூட. அப்படி இருக்கும்போது மருத்துவமனைக்கு கொண்டு வந்த உடனே இறந்து போய்விட்டார் என்று கூறி இருப்பதில்தான் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.
 

அதிலும் அந்த பெண்ணின் மூக்கிலும், வாயிலும் ரத்தம் வந்து இருக்கிறது. அதை பார்க்கும்போது அந்தப் பெண்ணை ஏதோ டார்ச்சர் செய்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் அந்தப் பெண் மர்மமான முறையில் இறந்து இருக்கிறார் என்று தெரிகிறது. அதை மில் நிர்வாகம் பணபலம் மூலம் மூடி மறைத்து விட்டனர். இப்படித்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள மற்றொரு மில்லில் வேலை பார்த்து வந்த ஒரு பெண் கூலித் தொழிலாளியை நான்கு பேர் சேர்ந்து  பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டனர். அதையும் அந்த மில் நிர்வாகம் மூடி மறைத்துவிட்டது இதுபோல்  வடமதுரை அருகே உள்ள  ஒரு நூல் மில்லில் வேலை பார்த்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கேணியில் விழுந்து இறந்து கிடந்தனர். அதையும் தற்கொலை என கூறி விட்டனர், ஆனால் அந்த மூன்று இளைஞர்களும் மர்மமாக தான் இறந்துள்ளனர்.  


இப்படி இப்பகுதியில் உள்ள நூல்களில் வேலை பார்த்த 10க்கும் மேற்பட்ட ஆண், பெண் மில் கூலித் தொழிலாளர்கள் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்கள் ஆனால் பெத்த பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் வசதி இல்லாதை தெரிந்து கொண்ட மில் நிர்வாகமும் அந்த பாதிக்கப்பட்ட பொற்றோர்களுக்கு ஒரு கணிசமான தொகையை கொடுத்து மூடிமறைத்து விடுகிறார்கள். அதற்கு போலீசாரும் உடந்தையாக செயல்பட்டு வருகிறார்கள். அதுனால்தான் இப்படி நூல் மில்களில் வேலைபார்க்கும் ஆண், பெண், கூலி தொழிலாளிகளின் சாவும் மர்மமாக இருந்து வருகிறது என்று கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்