ADVERTISEMENT

மிஷ்கின் மீது இளம் தயாரிப்பாளர் சீட்டிங் குற்றச்சாட்டு... உதவுவாரா உதயநிதி?

12:25 PM Oct 06, 2018 | parameshwaran



"சித்திரம் பேசுதடி'. இதுதான் டைரக்டர் மிஷ்கினின் முதல் படம். ஸ்டார் வேல்யூ இல்லாததால் ரிலீசான சில நாட்களிலேயே தியேட்டர்களில் இருந்து படத்தைத் தூக்கி விட்டார்கள். ஆனால் மிகச் சரியாக கணக்குப்போட்டு, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், "சித்திரம் பேசுதடி'யை அண்டர்டேக் பண்ணி ரீ ரிலீஸ் செய்தார். படமும் பட்டையைக் கிளப்பியது, மிஷ்கினின் வாழ்க்கையிலும் ஒளி பிறந்தது.

ஆனால் இன்றோ ஒரு இளம் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவின் வாழ்க்கையையே இருட்டாக்கிவிட்டார் மிஷ்கின். மிகவும் நொந்த நிலையில் இருக்கும் அந்த ஹீரோவான மைத்ரேயாவைத் தொடர்பு கொண்டு, ""என்னதாங்க நடந்தது'' எனக் கேட்டோம்.

'டிரான்ஸ் வேர்ல்டு'ங்கிற எங்க பேனருக்கு படம் பண்ணித் தருவதாக 2015 ஜூலை மாதம் அக்ரிமென்டில் கையெழுத்துப் போட்டார் மிஷ்கின் சார். இதற்காக பெரிய அமவுண்டும் அட்வான்சாகக் கொடுத்தோம்'' என்றவரிடம், ""எவ்வளவு எனக் கேட்ட போது'', "அதப் பத்தி வேணாம் சார். ஆனா தமிழ் சினிமாவுல யாரும் கொடுக்க முன்வராத தொகை. அவ்வளவு தான் சொல்லமுடியும்'' என்றவர் மேலும் சொல்லத் தொடங்கினார்.

"அட்வான்ஸ் கொடுத்து ஒன்பது மாசம் கழிச்சு, அதாவது 2016 மார்ச் மாசம் மிஷ்கின் சாரைச் சந்தித்து நம்ம கம்பெனிக்கு எப்ப சார் படம் பண்ணுவீங்கன்னு கேட்டப்ப, இப்ப "சவரக்கத்தி' படம் எடுத்துக் கிட்டிருக்கேன். ஆறு மாசத்துல முடிஞ்சதும் ஸ்டார்ட் பண்ணிரலாம்னு சொன்னார். ஆனா அந்தப் படம் ஒன்பது மாசம் ஆகியும் முடியுறமாதிரி தெரியல. ஒருவழியா அந்தப் படமும் முடிச்சப்புறம் கேட்டப்ப, விஷால் ஒரு படம் பண்ணித் தரச்சொல்லிக் கேட்ருக்காரு. அது முடிஞ்சதும் நம்ம படம்தான்னு சொல்லி"துப்பறிவாளன்' படத்தை ஸ்டார்ட் பண்ணிட்டாரு.

'துப்பறிவாளன்' ஷூட்டிங் நடந்துக் கிட்டிருக்கும்போது மிஷ்கின் சாரோட ஆபீசுக்கு அடிக்கடி போவேன். அங்கிருக்கும் அவரோட மேனேஜர் ஜோயலிடம் கேட்டபோது, அடுத்து உங்களுக்குத்தான் படம். அந்தக் கதை சம்பந்தமாத்தான் சார் டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருக்காருன்னு சொன்னபோது எனக்கும் நம்பிக்கை வந்துச்சு.

இதுக்கிடையில மிஷ்கின் சாரை கேஷுவலா சந்திக்கும்போதெல்லாம், "என்னைப் பத்தி இண்டஸ்ட்ரியில தப்புத் தப்பா பேசுவார்கள். அதையெல்லாம் நீ நம்பக்கூடாது. நான் உனக்கு அப்பா மாதிரி. என்னை நீ சந்தேகப்படக்கூடாது. என்மேல் நீ நம்பிக்கை வைத்துதான் ஆகணும்.' இப்படியெல்லாம் பேசுனாரு. ச்சே இவ்வளவு நல்ல மனுஷனா இருக்காரேன்னு நானும் நினைச்சுக்கிட்டேன்.

2017 நவம்பரில் மிஷ்கின் சாரிடம் கேட்டபோதும் பழைய பல்லவியைப் பாட ஆரம்பிச்சாரு. அதுக்கப்புறம் திடீர்னு அவரின் செல்ஃபோன் நம்பரை மாத்திட்டாரு. அவரோட மேனேஜர் ஜோயலிடம் கேட்டபோது, இப்ப நான் அவரிடம் வேலை பார்க்கலை. நீங்களே போய்ப் பார்த்து கேட்டுக்கங்கன்னு கை விரிச்சுட்டாரு.

இந்த நேரத்துலதான் எந்தக் கதையைச் சொல்லி, ரெட் கலர் டிசைனெல்லாம் காண்பித்து, எங்க கம்பெனியில் அக்ரிமென்ட் போட்டாரோ, அதே 'சைக்கோ' டைட்டிலுடன் உதயநிதி ஸ்டாலின் நடிக்கப் போறதா நியூஸ் வர ஆரம்பிச்சதும், நேரா மிஷ்கின் சார் ஆபீஸ் போய் ஒருநாள் முழுக்கக் காத்துக்கிடந்து அவரைச் சந்திச்சு கேட்டதும், "இனிமே உங்க கம்பெனிக்கு படமும் பண்ண முடியாது. அட்வான்ஸ் பணத்தையும் திருப்பித் தரமுடியாது'ன்னு சொன்னதும் என் தலையில இடிவிழுந்த மாதிரி ஆகிவிட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


"சரிங்க கோர்ட்டுக்கோ தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்கோ போய் முறையிடலாமே?'' என நாம் கேட்டதற்கு, "மிஷ்கின் சாரோட மனசாட்சிதாங்க உச்சநீதிமன்றம். அதுல அவரு பொய் சொல்லாம இருந்தா சரி'' என்றார் விரக்தியுடன்.

கோலிவுட் ஏரியாவில் நாம் விசாரித்தவரையில் மைத்ரேயா தரப்பிலிருந்து மிஷ்கினுக்கு அட்வான்ஸ் பணமாக ஒன்றரை கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கவுன்சிலில் விஷால் அணி சார்பில் எக்ஸ்கியூட்டிவ் மெம்பராக ஜெயித்தவர் மிஷ்கின். அதுவுமில்லாமல் விஷாலை வைத்து 'துப்பறிவாளன்' படத்தை எடுத்ததால் மேலும் மேலும் நெருக்கமானார். அந்த விஷால் தான் தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் தலைவராக இருப்பவர்.

இப்போது உதயநிதியை வைத்து 'சைக்கோ'-வை எடுத்து வருவதால் அரசியல் ரீதியாக தனக்கு சப்போர்ட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு இளைஞனின் வாழ்க்கையை இருட்டாக்கிவிட்டார் மிஷ்கின். ஆனால் இதற்கெல்லாம் உதயநிதி உடந்தையாக இருப்பாரா என்ன?

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT