தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் கடந்த 22–ந் தேதி போலீஸ் தடியடியில் காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்த 40 வயதான செல்வசேகர் என்பவர் வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனை வாயிலின் முன்பு செல்வசேகரின் தாய் மற்றும் சகோதரிகள் கதறி அழுதனர். இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.

Advertisment

selvasekar

செல்வசேகர் தந்தை பலவேசம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு தாய் மாசாணம் மற்றும் 2 அக்காள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. செல்வசேகருக்கும், மற்றொரு அக்காவுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

செல்வசேகர்தாய் கதறி அழுதவாறு கூறியதாவது:–

என்னுடைய மகன் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். அவன் உண்டு, வேலை உண்டு என்று இருப்பான். என்னுடைய கணவர் இறந்த பிறகு, அவனது வருமானத்தில்தான் எங்களது குடும்பம் நடந்து வந்தது. கடந்த 22–ந் தேதி வேலைக்கு சென்றான். ஸ்டெர்லைட் போராட்டத்தை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

selvasekar-03.jpg

எனவே, இன்று விடுமுறை வீட்டுக்கு செல்லுங்கள் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதையடுத்து என்னுடைய மகன் ஊருக்கு வருவதற்காக 3–வது மைல் பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளான். அங்கு வந்த போலீசார் என்னுடைய மகனை சரமாரியாக லத்தியால் தாக்கி வயிற்றிலும், மார்பிலும் மிதித்துள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவன், ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்து விட்டான். எனக்கு கொல்லிப்போட இருந்த ஒரே மகனை கொன்னுடாங்க. அப்பாவியான என்னுடைய ஒரே மகனை இழந்து விட்டேன். இனி பிழைப்புக்கு நாங்கள் என்ன செய்ய போகிறோம் என கதறினார். செல்வசேகரின் சகோதரிகள் கூறுகையில், அரசு, வீட்டில் ஒருவருக்கு வேலையும், ரூ.10 லட்சமும் தருவதாக கூறியுள்ளது. அந்த 10 லட்சம் ரூபாய் எங்களுடைய தம்பி உயிரை தருமா? என்று கேட்டபடி கதறி அழுதனர்.