
இன்றைய காதல் நொடியில் மாறிவிடுகிறது. ஆனால், இன்னும் பல உண்மையான காதல்களும் இருக்கத்தான் செய்கிறது. காதலியோ, காதலனோ வேறு இடத்தில் திருமணம் செய்துவிட்டால், காதலித்த கால சந்தோசங்களை நினைத்து தனியாகவே வாழும் பலர் இருக்கிறார்கள். ஆனால் மற்றொரு பக்கம் இனக்கவர்ச்சியால் உருவாகும் காதல், அடிக்கடி ஆளை மாற்றிக்கொண்டேதான் இருக்கிறது.
இப்படியான நிலையில்தான், ஒரு உண்மையான காதலன் 20 வருடங்களாக தன் காதலி வருவார் என்று வழிமேல் விழி வைத்து சாலையோரக் குன்றின் மேல் புயல், மழை, வெயில், காற்று எதுவானாலும் வேறு எங்கேயும் போகாமல் உட்கார்ந்த நிலையிலேயே காதலியின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மூலங்குடி கிராமத்தைச் சேர்ந்த நாகாயின் (70) கடைசி மகன் நாகராஜன் (40). கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பள்ளிப்படிப்பை முடித்ததோடு குடும்ப வறுமையைப் போக்க கோவைக்குச் சென்று அங்குள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை செய்தபோது, கேரளாவைச் சேர்ந்த பெண் மீது காதல் வர அண்ணன்கள், சகோதரிகளுக்குத் திருமணமானதும் நாம திருமணம் செய்வோம் என்று காதலியைத் தனது சொந்த ஊரான மூலங்குடிக்கு அழைத்து வந்துவிட்டார்.
அவர் அழைத்து வந்த தகவல் அறிந்து காதலியின் உறவினர்கள் ஒரு படையோடு காரில் வந்து அவரது காதலியை அழைத்துச் சென்றுவிட்டனர். நாகராஜனை பிரிய மனமின்றி கண்ணீரோடு பெற்றோருடன் சென்றுவிட்டார். 20 வருடங்களுக்கு முன்பு நடந்தன இந்த சம்பவங்கள்.

அதன் பிறகு, தன் காதலி எப்படியும் வந்துவிடுவார் என்று சாலையிலேயே நின்று பார்த்தவர், அடுத்த சில நாட்களில் தனது ஊருக்குள் வரும் சாலையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் சாலையோரம் உள்ள சிறிய குன்றின் மேல் அமர்ந்தவர், தனது தாய் அழைத்தும் வரவில்லை. புயல், மழை, வெயில், காற்று இப்படி இயற்கை சீற்றங்கள் வந்தபோதும்கூட மாற்று இடம் தேடி போகவில்லை. அதே பாறையில் அதே இடத்தில் அமர்ந்த நிலையிலேயே இருக்கிறார். மழையை சமாளிக்க பல வருடங்களுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த தென்னங்கீற்று சம்மங்கூடுகளும் சாக்கு பைகளுமே பயன்படுத்திவருகிறார். 100 நாள் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் கவனிக்கும் அவரது 70 வயது தாய், தினசரி உணவுகளைக் கொண்டு வந்து வைக்கிறார். ஆள் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள கண்மாயிலிருந்து தண்ணீரை வாட்டர் பாட்டில்களில் எடுத்து வந்து குடிக்கவைக்கிறார்.
இப்படியே காதலியின் வருகைக்காக 20 வருடங்களாக யாரிடமும் பேசாமல் காத்திருந்ததால் தற்போது மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் அறிந்து மாவட்ட மனநல திட்டம் ஊழியர்கள், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

20 வருடமாக காதலியின் வரவை நோக்கி உ்ட்கார்ந்தே இருந்த காதலனால் உண்மைக் காதல் வெளிப்படுகிறது. அவரது அம்மா நாகாயி, “எனக்கும் வயசாகிடுச்சு. 100 நாள் வேலை செஞ்சு இதுவரை சோறு போட்டேன். அவனுக்குப் பல இடங்கள்ல வைத்தியம் பார்த்தோம். இனிமேலாவது நல்ல முறையில சிகிச்சை கொடுத்து என் மகன் என்னோட திரும்பி வர வைக்கணும். ஏதாவது அரசாங்க உதவி கிடைத்தால் உதவியாக இருக்கும்” என்றார்.