'My expectations were dashed'-  pmk Ramadoss

பாமக நிறுவனர் ராமதாஸ் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

இமாச்சலப்பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தனர். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது.

Advertisment

இந்த விபத்தில் சிக்கி காரில் வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் சிக்கிப் பலியான கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். அதே சமயம் இந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை கடந்த 8 நாட்களாகத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 8 நாட்களாக நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இமாச்சல் காவல்துறை துணை ஆணையர் அமித் ஷர்மா இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மீட்கப்பட்ட அவரது உடலானது பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றி துரைசாமியின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வெற்றி துரைசாமியின் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

'My expectations were dashed'-  pmk Ramadoss

இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களின் புதல்வரும், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டுகளை செய்து வருபவருமான வெற்றி துரைசாமி இமாலய மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சட்லெஜ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அரசியலிலும், அதைக் கடந்தும் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் சைதை துரைசாமி. மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை நடத்தி ஏராளமான இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட அனைத்து சேவைப் பணி அதிகாரிகளையும், மாநில முதல் தொகுதி அதிகாரிகளையும் உருவாக்கி வருபவர் சைதை துரைசாமி. இவை தவிர திருமணம் உள்ளிட்ட ஏராளமான சமூகப் பணிகளையும் செய்து வருபவர் அவர். சைதை துரைசாமியின் அனைத்து தொண்டுகளுக்கும் துணை நின்று உதவியவர் வெற்றி துரைசாமி.

திரைத்துறையில் கால் பதித்து மக்கள் நலன் சார்ந்த திரைப்படங்களை இயக்கத் தொடங்கிய வெற்றி துரைசாமி, தமது அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தலங்களை பார்க்கச் சென்ற போதுதான் அவரது மகிழுந்து விபத்தில் சிக்கி சட்லெஜ் நதியில் கவிழ்ந்தது. கடந்த 4 ஆம் தேதி இந்த விபத்து நடந்ததாக செய்திகள் வெளியான நாளில் இருந்து வெற்றி உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று நினைத்து வந்தேன். ஆனால், எனது எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதுடன், அவர் உயிரிழந்து விட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி எனது இதயத்தை நிலைகுலையச் செய்து விட்டது. சைதை துரைசாமிக்கு ஏற்பட்ட இழப்புக்கு எப்படி ஆறுதல் கூறுவது? என்றே எனக்குத் தெரியவில்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.