‘Mutual fund advertisements starring Sachin and Dhoni are misleading!’

அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராங்க்ளின் டெம்பில்டன் அசட் மேனேஜ்மெண்ட் என்னும் நிதி நிறுவனம், இந்தியாவில் பரஸ்பர நிதி (மியூச்சுவல் பண்ட்) திட்டங்களை வழங்கி வந்தது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இந்த பரஸ்பர நிதிதிட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், கரோனா பாதிப்பைக் காரணம் காட்டி, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், ஆறு பரஸ்பர நிதிதிட்டங்களை முடித்துக் கொண்டதாக, 2020 ஏப்ரல் மாதம் இந்நிறுவனம் அறிவித்தது. இதன் மூலம், நாடு முழுவதும் 3 லட்சத்து 15 ஆயிரத்து 621 முதலீட்டாளர்களிடம் இருந்து 28 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த பிரேம்நாத் சங்கர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப் பிரிவினர், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூறி, பிரேம்நாத் சங்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘பரஸ்பர நிதி சரியானது என கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோர் விளம்பரப் பிரதிநிதிகளாக விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். இது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது.

Advertisment

இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தாவிட்டால், தங்கள் பணம் திரும்பக் கிடைக்காது. இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். மேலும், பொருளாதார குற்றப் பிரிவு துவங்கியது முதல் எத்தனை வழக்குகள் பதியப்பட்டன, எத்தனை வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது என அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும். முதலீட்டாளர்களின் நலன் காக்க, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்குவிசாரணையின்முன்னேற்றம் குறித்தும், முதலீட்டாளர்களின் பணத்தை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய, பொருளாதார குற்றப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதிசெந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசு, டி.ஜி.பி மற்றும் பொருளாதார குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டது.