
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் 7 பேரையும் பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் நகை அடகு நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில், கடந்த 22ஆம் தேதி 7 பேர் கொண்ட வடமாநில கும்பல், துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி, அங்கிருந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.
தெலுங்கானா மாநிலம் சைபராபாத் அருகே, ஒரு லாரி மற்றும் காரில் தப்பிச் செல்ல முயன்றபோது, அம்மாநில போலீசார் உதவியுடன் ஓசூர் ஹட்கோ போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 கிலோ நகைகள், 7 கைத்துப்பாக்கிகள், 96 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் அந்தக் கொள்ளையர்கள் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரூப்சிங் பாகல், சங்கர் சிங் பாகல், பவன்குமார் விஸ்கர்மா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த பூபேந்தர் மஞ்சி, விவேக்மண்டல், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த டேக்ராம், ராஜீவ்குமார் எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த 7 பேரையும் உடனடியாக சைபராபாத் சிறையிலேயே அடைத்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் (26.01.2021) அவர்களை ஓசூருக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
முதல்கட்ட விசாரணை முடிந்ததை அடுத்து, அவர்களை புதன்கிழமை (ஜன. 27) ஓசூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மேலும், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.