Skip to main content

கலைஞர் திமுகவுக்கு மட்டும் தலைவரல்ல... ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைவர்: மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும்: முத்தரசன்

Published on 08/08/2018 | Edited on 08/08/2018

 

திமுக தலைவர் கலைஞர் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடமில்லை என தமிழக அரசு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. 
 

இந்நிலையில், இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நம்மிடம் கூறியதாவது,
 

திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மட்டும் கலைஞர் தலைவர் அல்ல. அந்த கட்சியில் 50 ஆண்டு காலம் தலைவராக இருந்தார், முதலமைச்சராக இருந்தார் என்பதெல்லாம் உண்மை என்றாலும் கூட தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மரியாதைக்குரிய தலைவர் அவர். தேசியத் தலைவர்களில் ஒரு தலைவராக அவர் விளங்கி வருகிறார். அப்படிப்பட்டவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது வெறும் திமுகவின் கோரிக்கையாக மட்டும் பார்க்கக்கூடாது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

 

 

 

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அரசியல் பாகுப்பாடு காட்டக்கூடாது. மாநில அரசு இதில் அரசியல் பாகுப்பாடு காட்டாமல் மெரினாவில் அண்ணா நினைவிடத்திற்கு அருகில் இடம் ஒதுக்கீடு செய்து உரிய மரியாதையோடு நல்லடக்கம் செய்கின்ற பணியை பெருந்தன்மையோடு மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

 

இந்த பிரச்சனையில் திமுக தலைவராக அரசு கருதக்கூடாது. தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த ஒரு மூத்த அரசியல் தலைவர். தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஒரு பெரும்பாடுபட்ட ஒரு மகத்தான தலைவர். அவரை ஒரு கட்சியின் தலைவர் என பார்ப்பது ஒரு மிக குறுகிய கண்ணோட்டமாகும். ஒரு பெருந்தன்மையோடு மாநில அரசு இதில் செயல்பட வேண்டும். இதுவெறும் திமுகவின் கோரிக்கை, திமுக தொண்டர்களின் கோரிக்கையாக அரசு பார்க்கக்கூடாது. பெரியாரை தந்தையாக ஏற்றுக்கொண்டது போல், கலைஞரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 



 

 

சார்ந்த செய்திகள்