முத்தரையர் ஓட்டு முத்தரையருக்கே.. போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு..!

Mutharaiyar vote for Mutharaiyar Poster pasted in viralimalai

தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டாலே அந்தந்ததொகுதியில் உள்ள வாக்காளர்கள், தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே அனைத்துக் கட்சியிலும் சீட்டுக் கொடுக்க வேண்டும், வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவது வழக்கம். இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து 2 முறை வெற்றிபெற்றுள்ள நிலையில், மீண்டும் 3வது முறையாக போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.

தனக்கு இந்தத் தொகுதிதான் என்பதால் 6 முறை தனது சி.வி.பி. பேரவை சார்பில் சொந்த செலவில் நலத்திட்டங்களும் வழங்கியுள்ளார். ஆனால், கடந்த 3ஆம் தேதி இந்த தொகுதிக்கு ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் நெவளிநாதன் சீட்டு கேட்டு விருப்ப மனு கொடுத்திருந்தார். தொடர்ந்து பாஜக தேர்தல் அலுவலகம் திறந்து தங்களுக்கு சீட்டு வேண்டும் என்று கேட்டனர். இவர்கள் அனைவரும் முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (06.03.2021) ‘முத்தரையர் ஓட்டு முத்தரையருக்கே. விராலிமலை தொகுதியில் முத்தரையர் வாக்குகள் அதிகமாக உள்ளதால் முத்தரையருக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்’ என்று போஸ்டர் ஒட்டி இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் விராலிமலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விராலிமலை ர.ர.க்கள் கூறும்போது,“கடந்த காலத்தில் முத்தரையர் பிரச்சனையில் அமைச்சர் சிக்கியதும் உடனே அதனை சரி செய்து புகார் கொடுத்த சொக்கலிங்கத்தை தன்னுடன் வைத்துக்கொண்டதோடு, தொடர்ந்து கட்சி பதவி, வாரியப் பதவிகளையும் கொடுத்து உடன் வைத்திருப்பதால் முத்தரையர் மக்கள் அமைச்சர் பக்கம் ஆதரவாக இருப்பார்கள்” என்கிறார்கள்.

viralimalai
இதையும் படியுங்கள்
Subscribe