Skip to main content

ஒன்றிய அரசின் விதிகளை எதிர்த்து இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா வழக்கு!

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

Musician TM Krishna sues against new rules on social media

 

சமூகவலைதளங்களில் ஒன்றிய அரசின் புதிய விதிகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

ஒன்றிய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து புதிய விதிகளை அறிவித்தது. அதில் முக்கியமாக இந்தியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான தகவல்கள் சமூகவலைதளங்களில் பகிரப்படுகிறது. எனவே அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், இந்தப் பதிவுகளை யார் பதிவிடுகிறார்களோ அவர்களுடைய விவரங்களை அரசு கேட்டால் கொடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களுக்கு விதிகள் உருவாக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், மத்திய அரசின் புதிய விதிகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்  கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ''தனியுரிமை, விருப்பப்படி கிடைக்கும்போதுதான் தன்னைப் போன்ற ஒருவன் கலைஞனாக மட்டுமல்லாமல் மனிதனாகவும் உணர முடியும். ஒரு இசைக்கலைஞன் என்ற அடிப்படையில் தன்னுடைய உரிமைகளைப் பறிக்கும் வகையில் இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. கருத்துரிமை, தனிநபர் ரகசிய காப்புரிமை இருந்தால்தான் ஒரு கலைஞனாக மட்டுமல்லாமல் மனிதனாகவும் உணர முடியும். எனவே இந்த விதிகள் இடையூறாக இருக்கிறது. அரசியலமைப்பில் வழங்கப்பட்ட கற்பனை சுதந்திரத்தைத் தணிக்கை செய்யும் விதமாக புதிய விதிகள் உள்ளன. கருத்துரிமை, தனியுரிமை ஆகியவை விருப்பப்படி சுதந்திரமாக கண்ணியத்துடன் கிடைக்க வேண்டும்” எனவும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கில் மூன்று வாரங்களில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா நைட்ரஜன் பிஸ்கட்?-அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் வீடியோ

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
'Will Nitrogen Biscuits be Banned Like Cotton Candy'- Boy's Shocking Video

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன்  பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே ஆண்டாண்டு காலமாக திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று திரவ நைட்ரஜன் எவாபரேஷன் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.