திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் துளை போட்டு 13 கோடி தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளை அடித்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சுரேஷ் இன்று திருவண்ணாமலை ஒருங்கிணைந்த செங்கம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனான். சுரேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் இன்று முருகன் திருச்சியில் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.
திருச்சி தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள திருவரம்பூரை அடுத்த வேங்கூர் செல்லும் வழியில் நருங்குழி நகர் பகுதியில் முருகன் மற்றும் அவர் மனைவி மஞ்சுளா மூன்று வயது மகன் மற்றும் மாற்றுத்திறனாளி மகள் சுகன்யா ஆகியோருடன் கடந்த ஒரு மாதம் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
இரண்டு கார்களுடன் குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து வெளிநாட்டில் வேலை செய்து திருச்சி திரும்பிய ஷேக் அப்துல் கபூர் என்பவருக்கு சொந்தமான வீட்டை முருகன் வாடகைக்கு எடுத்திருக்கிறான்.
60 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து 6,000 ரூபாய் வாடகைக்கு பேசி தங்கி இருந்ததும், கடந்த 27ம்தேதி குடும்பத்தினரை அழைத்து வெளியூர் சென்று விட்டு திரும்பவும் கடந்த ஒன்றாம் தேதி அன்று வீடு திரும்பியவன். கடந்த வாரம்வீட்டில் சிறப்பாக ஆயுதபூஜை கொண்டாடி விட்டு அங்கிருந்து அதன்பிறகு கார் மூலமாக வெளியே சென்றவன் திரும்பவும் இந்த வீட்டிற்கு வரவே இல்லை. தகவல் தெரிந்து தனிப்படை போலிசார் அங்கே சென்றபோது அந்த வீட்டில் பெரிய நாய் ஒன்று மட்டும் பாதுகாப்புக்காக இருக்கிறது.
முருகனுக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்த சேஷக் அப்துல் கபூர் என்பவரை மட்டும் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். திருச்சியில் ஒரு மாதம் குடும்பத்தோடு தங்கி நகைக்கொள்ளையை திட்டமிட்டு நடத்தியதும். அதே வீட்டில் ஆயுதபூஜை கொண்டாடியதும். போலிசருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.