ADVERTISEMENT

தந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா? -மனிதாபிமான அடிப்படையில் உயர் நீதிமன்றம் கேள்வி!

10:37 PM Jun 05, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் முருகன், தன் தந்தையின் மரணம் தொடர்பாக, வெளிநாட்டில் வாழும் அவர் தாயுடன் தொலைபேசி மூலமாக பேசுவதற்கு, மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதி வழங்க முடியாதா? என சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT


ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் தந்தை சமீபத்தில் காலமானார். இந்நிலையில், இலங்கையில் வசிக்கும் முருகனின் தாய் மற்றும் லண்டனில் வசிக்கும் தங்கையுடன் வாட்ஸ்-ஆப் வீடியோ கால் மூலம் பேச முருகனுக்கும், நளினிக்கும் அனுமதியளிக்க உத்தரவிடக்கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் பத்மா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இவர்கள் இருவரையும் வீடியோ கால் மூலம் வெளிநாடுகளில் வசிப்பவர்களுடன் பேச அனுமதித்தால், அது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படக்கூடும்’ என அரசுத் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்களுடன் பேச சிறை விதிகளில் எந்தத் தடையும் இல்லை. மற்ற கைதிகளுக்கு அனுமதியளிக்கும்போது, முருகனுக்கும், நளினிக்கும் மட்டும் அனுமதி மறுப்பது அடிப்படை உரிமையை மீறிய செயலாகும். வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் பேச எந்த விதிகளும் தடை விதிக்கவில்லை. நீதிமன்றமும் தடை விதிக்க முடியாது என வலியுறுத்தினார்.


இதையடுத்து, நீதிபதி ஹேமலதா, சிறைகளில் மொபைல், சிம் கார்டு, சார்ஜர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜாமர் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, கரோனா காரணமாக கைதிகள் உறவினர்களுடன் பேச ஆன்ட்ராய்டு மொபைல்களைப் பயன்படுத்த அனுமதித்து அரசாணை ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? என அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகக் கூறிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், உள்நாட்டில் வசிக்கும் உறவினர்களுடன்தான் பேச அனுமதிக்கப்படுகிறது. உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவதை உரிமையாகக் கோர முடியாது. இதுசம்பந்தமாக முடிவெடுக்க சிறைக் கண்காணிப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வெளிநாடுகளில் வசிப்பவர்களுடன் பேச அனுமதி கோரும் இந்த வழக்கில், வெளியுறவு அமைச்சகத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.


அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், தாயுடனும், தங்கையுடனும் பேச அனுமதித்தால் சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படும் எனக் கூறும் அரசு, அவர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றியபோது, சர்வதேச தாக்கம் குறித்து பரிசீலிக்கவில்லையா? விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், போனில் பேச தடை விதிப்பது நியாயமா? ராஜீவ் கொலை என எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேசுவதற்கு முருகனை அனுமதிக்கக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பினார். பிறகு, வழக்கு விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அப்போது, வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT