ராஜமரியாதையுடன் பெங்களுர் சிறையிலிருந்து திருச்சி வரும் கொள்ளையன் முருகன்!

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் 2-ந் தேதி அதிகாலை ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளைப்போனது. இது தொடர்பாக கோட்டை குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கோசல்ராமன் வழக்குப்பதிவு செய்து திருச்சி டிசி மயில்வாகணன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் தொடர்புடைய திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த மணிகண்டன், முருகனின் சகோதரி கனகவல்லி, மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அனைவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

murugan

இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முருகனின் மைத்துனர் சுரேஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தான். பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட அவனை அங்குள்ள வழக்குகள் தொடர்பாக போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதற்கிடையில் நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீஸ் காவலில் விசாரிக்க திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக திருச்சி கோர்ட்டில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1-ல் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மேலும் விசாரணைக்காக பெங்களூரு சிறையில் இருந்து அழைத்து வர கோர்ட்டில் வாரண்ட் பெற்று சென்றனர்.

பெங்களூரு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்து திருவாரூர் முருகனை திருச்சி அழைத்து செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் கீழ் கோர்ட்டில் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, மேல்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் திருவாரூர் முருகனை விசாரணைக்காக அழைத்து செல்ல 16.11.2.19 அனுமதி கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவனை பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பெங்களூரு சிறையில் இருந்து 18.11.2019 திருவாரூர் முருகனை போலீசார் அழைத்து வர உள்ளனர். நாளை 19.11.2.19 திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கை தொடர்ச்சியாக விசாரணை செய்து கொண்டிருந்த டி.சி. மயில்வாகணன் இரண்டு நாட்களுக்கு முன்பு எஸ்.பி.யாக பதவி உயர்வு அளித்து பணிமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

திருச்சி போலிசார் கொள்ளையன் முருகனை போலிஸ் கஸ்டடி எடுக்க 50 நாட்கள் தொடர் முயற்சிக்கு பிறகு தற்போது தான் அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. மேலும் நகைக்கடையில் கொள்ளைப்போன 28 கிலோ தங்க நகை, ஒரு கிலோ வைர நகைகளில் இதுவரை 27 கிலோ 800 கிராமை போலீசார் மீட்டனர். மீதியுள்ள ஒரு கிலோ 200 கிராம் நகைகளை பறிமுதல் செய்ய இந்த விசாரணை நடக்கிறது. மேலும் திருச்சியில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் முருகன் பெயர் தொடர்பில் இருப்பதால் ராஜமரியாதையுடன் நடத்தி அவனிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்க வேண்டும் என்பதே தற்போது திருச்சி போலிசின் முக்கிய கடமையாக உள்ளது.

jewelry lalitha jewellery Police investigation Robbery trichy
இதையும் படியுங்கள்
Subscribe