மருத்துவமனையில் பழச்சாறு அருந்தி உண்ணாவிரதத்தை முடித்த முருகன்!

murugan

ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில், கடந்த 29 வருடங்களாகச்சிறையில் உள்ளநளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேருக்கு தூக்குத் தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாகக்குறைக்கப்பட்ட 4 பேர், ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் என 7 பேர் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள தனது மகளிடம் செல்ஃபோனில் பேசவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து, முருகன் சிறையில் கடந்த 25 நாட்களாக,உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனை முதலில் மறுத்த சிறைத்துறை பின்பு உண்மை என்றது.

செல்ஃபோனில் தனது மகளிடம் வீடியோ காலில் பேசினார் முருகன். இது சட்டப்படி தவறு என்பதால் அவர் மீது பாகாயம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. அதைத் திசைதிருப்பவே இப்படி உண்ணாவிரதம் இருந்து விவகாரத்தை திசை திரும்புகிறார் என்கிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள்.

இந்நிலையில், முருகன் உடல்நிலை மிகவும் மோசமானதால், டிசம்பர் 16-ஆம்தேதி இரவு, 7 மணிக்கு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று குளுக்கோஸ் ஏற்ற முடிவுசெய்தனர். மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றிக்கொள்ள மறுத்து அடம்பிடித்தார். இதனால், இ.சி.ஜீ உட்பட சில பரிசோதனைகள் மட்டும் நடத்திவிட்டு அவரை மீண்டும் சிறைக்கு அழைத்து வந்தனர்.

இரவு 11 மணியளவில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சாப்பிடாமல் இருந்தால் இன்னும் பல சிக்கல்களை உடல் சந்திக்க வேண்டிவரும் என மருத்துவர்கள் கூறினர். அதனைத்தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி சில வாக்குறுதிகள் தந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து டிசம்பர் 17-ஆம்தேதி, பழச்சாறு அருந்தி, தனது உண்ணாவிரதத்தை முருகன் முடித்தார் எனச் சிறைத்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் உள்ள முருகன் நாளை சிறைக்குத்திரும்ப அழைத்து வரப்படுவார் என்றும், சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Prison rajeev murder case
இதையும் படியுங்கள்
Subscribe