இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி (22.06.2025) மதுரையில் உள்ள பாண்டி கோவில் அருகே தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடைபெற்றது. முன்னதாக இந்த மாநாட்டையொட்டி ஜூன் 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தினந்தோறும் அறுபடை வீடுகளில் உள்ள முருகன் கோவில்களை அமைத்து தினந்தோறும் வழிபாடு செய்யப்பட்டு வந்தது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 

அதே போன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநில தலைவரான தமிழிசை சௌந்தரராஜன், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, “திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபம் ஏற்ற வேண்டும். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளைக் காக்க வேண்டும். 

தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும். தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும். கந்த சஷ்டி தினத்தன்று கந்த சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், பகைமையை தூண்டும் வகையிலும் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி செல்வகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.