ADVERTISEMENT

பன்றிகளை பிடிக்க வந்த நகராட்சி ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!

05:20 PM May 05, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணா தெருவைச் சேர்ந்த குகேன் என்ற 2 வயது குழந்தை கடந்த வாரம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த பன்றி குழந்தையைக் கடித்து குதறியது. இதில் காயமடைந்த குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து தெருவில் சுற்றிதிரியும் பன்றிகளைப் பிடிக்கப் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து சிதம்பரம் நகராட்சி ஆணையர் அஜீதா பர்வீனா உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் மேற்பார்வையாளர்கள் பாஸ்கர், காமராஜ் உள்ளிட்டவர்கள் ஏற்பாட்டின் பேரில் செங்கல்பட்டிலிருந்து பன்றி பிடிக்கும் தொழிலாளர்களை வரவழைத்து நகராட்சி பகுதியில் சுற்றித் திரிந்த பன்றிகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதனடிப்படையில் சிதம்பரம், தில்லை நகர், காந்தி நகர், கோவிந்தசாமி தெரு, பழைய புவனகிரி ரோடு, குஞ்சர மூர்த்தி விநாயகர் கோவில் தெரு, எடத்தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சுற்றித் திரிந்த 40க்கும் மேற்பட்ட பன்றிகளைப் பிடித்து சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு புறவழிச் சாலை அருகே வந்தனர்.

அப்போது பன்றிகளின் உரிமையாளர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கத்தி, கட்டைகள் மற்றும் கற்களுடன் வந்து பன்றிகளைப் பிடித்துச் சென்ற சரக்கு வாகனத்தை வழிமறித்து பன்றி பிடிப்பதற்காக வந்திருந்தவர்களை கத்தி, கட்டையுடன் ஓட ஓட விரட்டித் தாக்கினர். இதுபற்றித் தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து நகராட்சி சார்பில் சிதம்பரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT