Skip to main content

முரசொலி பஞ்சமி நில விவகாரம்! -மு.க.ஸ்டாலினுக்குப் பதிலாக பிரதிநிதி ஆஜராக அனுமதி!

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

முரசொலி நில விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரி்ப்பதற்குத்  தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதை, அவசர வழக்காக எடுத்து விசாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முரசொலி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்கிறது. இந்த ஆணையத்துக்கு  விசாரிப்பதற்கு அதிகாரம் இல்லை எனவும், ஆணையம்  விசாரிக்கத்  தடை விதிக்க வேண்டும் என்றும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு முறையீடு செய்தார். இந்த வழக்கை நேற்று (2-ஆம் தேதி) பிற்பகல் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

 

Murasoli Panchami land issue!


முரசொலி பஞ்சமி  நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின நல ஆணைய  விசாரணைக்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பதிலாக பிரதிநிதி ஆஜராக அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

முரசொலி அறக்கட்டளைக்கு சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக தரப்பில் தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார் மீதான விசாரணைக்கு திமுக தலைவர் ஸ்டாலினை வரும் 7-ஆம் தேதி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  தேசிய பட்டியலின நல ஆணையத்திற்கு முரசொலி அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும் சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனவும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ். பாரதி  மனு தாக்கல் செய்திருந்தார்.

 

Murasoli Panchami land issue!


அந்த மனுவில், முரசொலி சொத்து முறையாக நில உரிமையாளர்களிடம் இருந்து விற்பனை பத்திரம் மூலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தின் உரிமையானது 83 ஆண்டுகளாக முரசொலி அறக்கட்டளையின் வசம் தான் உள்ளது. பட்டியலின மக்களின் பாதுகாப்பு, உரிமை மீறல், மற்றும் உரிமை மறுக்கப்படுவது தொடர்பான புகார்களை மட்டுமே தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியும்.  அது தொடர்பாக,  ஆவணங்கள் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும். புகாரளித்த பாஜகவின் மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அல்ல. அரசியல் காரணங்களுக்காக அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் அளிக்கப்பட்டுள்ள இந்தப் புகாரை நிராகரிக்க வேண்டும். பாஜக ஸ்ரீனிவாசனுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னையில் பஞ்சமி நிலங்கள் இல்லை என்று சட்டப் பேரவையிலேயே அறிவித்தார். முரசொலி நிலம் தொடர்பான புகார் உள் நோக்கம் கொண்டது எனத் தெரிகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றியை சகித்து கொள்ள முடியாமல் பாஜக இந்தப் புகாரை அளித்துள்ளது. எனவே முரசொலி நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், ஜனவரி 7-ஆம் தேதி டெல்லியில் உள்ள தேசிய பட்டியலின ஆணைய விசாரணைக்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதிலாக அவரது பிரதிநிதி ஆஜராக அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும், முரசொலி நிலத்திற்கான பட்டா, கிரயபத்திரம் உள்ளிட்ட ஆவணங்களின் விவரங்களை ஆணைய விசாரணைக்கு அனுப்ப திமுக தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, எந்த ஆவணங்கள் அடிப்படையில் முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது என, பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசனும், தேசிய பட்டியலின ஆணையமும், ஆணைய துணைத் தலைவரும் விளக்கம் அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 21-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்