Skip to main content

டீசல் பில்லில் மாதம் ரூ.2 லட்சம் கேட்ட அதிகாரிகள்..! தற்கொலை செய்து கொண்ட நகராட்சி டிரைவர்..!!!

Published on 25/10/2018 | Edited on 25/10/2018

"நகராட்சி வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் டீசலுக்கு பில் பணத்தில் முறைகேடு செய்து மாதந்தோறும் ரூ.2 லட்சம் தரவேண்டும் என நகராட்சி ஆணையரும், சுகாதார ஆய்வாளரும் மிரட்டியதாலே தற்கொலை முடிவினை எடுத்தேன். என் சாவிற்கு அவர்கள் இருவருமே காரணமாவார்கள்." என கடிதம் எழுதி வைத்து விட்டு, வியாழனன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார் கடந்த 30 வருடங்களாக இராமேஸ்வரம் நகராட்சியில் குப்பை வண்டி ஓட்டி வந்த டிரைவர் நாகராஜன்.

 

 Municipal worker suicide

 

21 வார்டுகளைக் கொண்ட இராமேஸ்வரம் நகராட்சியில் ஆணையராக பணிபுரிவர் வீரமுத்து. சுகாதார ஆய்வாளரகப் பணிபுரிவர் அய்யப்பன். ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமான இராமேஸ்வரம் நகராட்சியில் காணும் இடமெல்லாம் குப்பைக் கூளங்கள்தான். இதனை சரி செய்ய ஜே.சி.பி, டிராக்டர், லாரிகள் மற்றும் குப்பை அள்ளும் இயந்திரங்கள் என 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உண்டு. இதற்கான பராமரிப்பு டீசல் செலவே மாதத்திற்கு ரூ.7 லட்சத்தினைத் தாண்டும். அனைத்து வாகனங்களுக்குமான டீசல் செலவினத்தொகையை மாதந்தோறும் கணக்கீட்டு, அதற்கான பில் தொகையை சரி செய்வது, சீனியர் டிரைவரான தற்கொலை செய்து கொண்ட டிரைவர் நாகராஜனின் கடமை. இந்த நிலையில், " டீசல் தொகையில் முறைகேடு செய்து மாதத்திற்கு ரூ.2 லட்சத்தினை தனக்கு வழங்க வேண்டுமென நகராட்சி ஆணையரும், சுகாதார ஆய்வாளரும் வற்புறுத்திக் கேட்டதாலேயே தற்கொலை முடிவிற்கு செல்ல வேண்டியிருந்தது." என கடிதம் எழுதி வைத்து விட்டு துளசி பவ மாடத் தெருவிலுள்ள தனது வீட்டிலேயே தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார்.

 

 Municipal worker suicide

 

அவரது உறவினர்களோ., " கடந்த சில தினங்களாக நகராட்சி ஆணையர் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக, கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த நாகராஜன், இன்று காலை அவரது மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு அவர் மட்டும் வீடு திரும்பியுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்த அவரது மனைவி, வீட்டினுள் சென்றபோது தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தார் நாகராஜன். அருகில் இருந்த மேஜையில் காவல்துறைக்கு எழுதிய கடிதம் இருந்தது இதற்கு முழு காரணம் நகராட்சி ஆணையர் சுகாதார ஆய்வாளர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யும் வரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம்." என்றனர் அவர்கள்.

 

 

இச்சம்பவத்தை தொடர்ந்து நகர் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு வந்து போலீசார் விசராணை செய்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் வீர முத்துக்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் இருவரும் ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்று வரும் கூட்டத்தில் கலந்து கொண்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.