Skip to main content

கொஞ்சி ‘விளையாடிய’ லஞ்சம்! - விருதுநகர் நகராட்சி வில்லங்கம்!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

Municipal Commissioner who went to Female Assistant Commissioner home! - Virudhunagar Municipal issue

 

 

“இதெல்லாம் தப்பு இல்லீங்களா?” என்று கேட்டார், விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி குறித்து நம்மிடம் முறையிட வந்தவர்... தொடர்ந்து அவர் “என்னதான் பழக்கம்னாலும், தன்னுடன் பணிபுரியும் பெண் ஒருவரை, வெளிமாவட்டத்திலுள்ள அவரது வீட்டுக்கு, அரசு வாகனத்தில் கொண்டுபோய் விடலாமா? ஆணையர் சம்பந்தப்பட்ட இன்னொரு பெண் விவகாரம்.

 

சுகாதாரத்துறையில் பணிபுரியும் அந்த பெண், ஆளும்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். பழைய வீடு ஒன்றை, அவர் வாங்கியிருக்கிறார். அதற்கு, ரூ.6 லட்சம் வரை, இந்த ஆணையர் கொடுத்திருக்கிறார்.   அந்தப் பெண்ணுடன்,  சுகாதாரத்துறை ஆய்வாளர் செந்திலாண்டவரும் நட்பைத் தொடர்கிறார். மொத்தத்தில், விருதுநகர் நகராட்சி, சுத்தமாகவும் இல்லை; சுகாதாரமாகவும் இல்லை.” என்று ஆதங்கப்பட்டார். 

 

விருதுநகர் நகராட்சியில் என்னதான் நடக்கிறது? 

 

வேறு மாவட்டத்தில் வசிக்கும் அந்த பெண் உதவியாளரை, அரசு வாகனத்தில் அழைத்துக்கொண்டு போய் விட்டிருக்கிறார் ஆணையாளர். அந்த ஊரில்,  ஒரு தெருவுக்கு முன்னதாகவே வாகனத்தை நிறுத்தச் செய்து,  தனது டிரைவரிடம் ‘நீ இங்கேயே இரு.’ என சொல்லிவிட்டு, அவர் மட்டும் அந்த பெண்ணின்  வீட்டுக்குப் போயிருக்கிறார். நேரம் போய்க்கொண்டே இருக்க.. பொறுமை இழந்த டிரைவர், அந்தப் பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவர் வீடு எங்கே இருக்கிறது?’ என்று தெரு முழுவதும் விசாரித்து,  அந்த வீட்டை அடைந்திருக்கிறார். நடந்த இக்கூத்து, மறுநாள் பரவ, நகராட்சியே கைகொட்டிச் சிரித்திருக்கிறது.

 

விருதுநகரில், கே.கே.எஸ்.எஸ்.ஆர். வீட்டுக்கு பக்கத்தில் ஒரு ‘மூன்றெழுத்து’ காம்ப்ளக்ஸ் உண்டு. அவர்களுக்கு இன்னொரு இடமும் உண்டும். இரண்டு அப்ரூவலுக்கும், மொத்தம் ரூ.40 லட்சம் லஞ்சமாகப் போய்ச் சேர்ந்திருக்கிறது. விட்டுவிட மனம் இல்லாமல், தங்களுக்கு வேண்டிய ஆளும்கட்சி பெண்மணியை மட்டும்  ‘அப்படியே’ வைத்துக்கொண்டு, கரோனா பணியில் இருந்த அத்தனை பேரையும், நீக்கிவிட்டது நகராட்சி நிர்வாகம். ஸ்வீப்பராக இருந்த ஒருவரை டிரைவராக ‘ப்ரமோட்’ பண்ணியிருக்கிறது. தினக்கூலியாக  ‘பிளம்பிங்’ வேலை பார்த்த ஒருவரை, அலுவலக வேலையில் அமர வைத்திருக்கிறது. இதற்கும்கூட, லட்சத்தில் லஞ்சம் கை மாறியிருக்கிறது. லஞ்சப்பணம் லட்ச லட்சமாகக் கொட்டுவதால், தங்களோடு பழகும் பெண்களுக்கு, சம்பந்தப்பட்டவர்களால்  வாரியிறைக்க முடிந்திருக்கிறது. 

 

Municipal Commissioner who went to Female Assistant Commissioner home! - Virudhunagar Municipal issue


நாம், அந்த வெளிமாவட்ட பெண் உதவியாளரை தொடர்புகொண்டோம். “அதுவந்து கமிஷனர் ஜீப்புல நான் போனது உண்மைதான். ஆனா.. திருமங்கலத்துலயே இறங்கிட்டேன். கமிஷனர் தங்கமானவரு. சார் மீது இதுவரைக்கும் ஒரு புகாரும் வந்ததில்ல.  நானும் அப்படிப்பட்ட பெண் கிடையாது.” என்று மறுத்தார்.  

 

அந்த பெண் அரசியல் பிரமுகரோ “எனக்கு நீ வேணும்னு என்கிட்ட கேட்டவங்க இருக்காங்க. நான் ரொம்ப போல்டானவ. யாரா இருந்தாலும் எதிர்த்து பேசுவேன். எத்தனையோ பெண்கள் பார்க்கிற அளவுக்கு, என் வீட்டுக்காரர் அழகானவரு. அப்படியிருக்கும்போது, நான் எதுக்கு வெளில போகப்போறேன். இது கடவுளுக்கே அடுக்காது. என்னைப் பத்தி தப்பா சொன்னவங்க நாசமா போவாங்க.. நான் வீட்ல வச்சு எத்தனை தொழில் பார்க்கிறேன் தெரியுமா? கமிஷனரை நான் பார்த்தே 20 நாளாச்சு. அப்புறம், சானிட்டர் இன்ஸ்பெக்டர் விஷயம்..  என்னை எத்தனை பேர்கிட்ட இப்படி கோர்த்துவிடப் போறாங்களோ?” என்று அலறினார்.

 

சுகாதார ஆய்வாளர் செந்திலாண்டவரிடம் பேசினோம். “எனக்கே சொந்தமா வீடு இல்ல. அட்டென்டன்ஸ் போடுவேன். நெறய வேலை வாங்குவேன். இதெல்லாம், சிலருக்கு பிடிக்கல. அப்புறம், அவரவருக்கு வேண்டிய ஆளுங்கள வேலையில சேர்க்க சொல்லுவாங்க. நான் பண்ணுறதில்ல. அதனாலதான்.. கதைகட்டி விடறாங்க.” என்றார். 

 

விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி நம்மிடம் “அரசு வாகனத்துல அந்த லேடி வீட்டுக்கு ஒரே ஒருதடவை போனேன். டிரைவரும் என்கூடவே வந்தாரு டீ போட்டு கொடுத்தாங்க. குடிச்சோம்.  ஊரு நல்லாயிருக்கணும்னு கடுமையா வேலை பார்க்கிறது ஒரு தப்பா?” என்று கேட்டவரிடம்,  “40 லட்சம் லஞ்சம்?’ என்று நாம் இடைமறிக்க,  “அதெல்லாம் கிடையாது. தவறான தகவல்.” என்று ஒரே போடாகப் போட்டார்.

 
அந்த பெண் உதவியாளரை மீண்டும் தொடர்புகொண்டு “கமிஷனர் உங்கள் வீட்டுக்கு வந்ததை ஒத்துக்கொண்டார். நீங்கள் ஏன் மறைத்தீர்கள்?’ என்று கேட்டோம். அதற்கு அவர், “பயத்துல பொய் சொல்லிட்டேன்.” என்றார்.  ‘ஏன் பயப்பட வேண்டும்? எதற்காகப் பொய் சொல்ல வேண்டும்?’ என்ற நமது கேள்விக்கு, அவரிடம் பதிலில்லை. எது பொய்? எது உண்மை? விருதுநகர் நகராட்சிக்கே வெளிச்சம்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.