
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வசிக்கும் மதுரையைச் சேர்ந்தவர் ராஜசிவப்பிரகாசம். இவர், கூட்டுறவு குடிசைத்தொழில் சங்கத்தின் உசிலம்பட்டி கிளை தலைவராக உள்ளார் எனச் சொல்லப்படுகிறது. இவர், கடந்த 5 ஆண்டுகளாக 195 நபர்களிடம் தன்னை கூட்டுறவுச் சங்கத் தலைவர் என்றும், ஒரு தனியார்ப் பள்ளியின் நிர்வாகி என்றும் ஏமாற்றி வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 6 கோடியே 89 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்.
இதுகுறித்து பணம் தந்து ஏமார்ந்தவர்கள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்தப் புகார் மனு அளித்தவர்களில் ஒருவரான, கண்ணன் என்பவர், “இதுவரை வேலை வாங்கித் தராமல் மோசடி செய்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் 2020ஆம் வருடம், நவம்பர் மாதம் 5ஆம் தேதி வழக்குத் தாக்கல் செய்து, 195 நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பட்டது. மேலும், 16.9.2020 அன்று 195 நபர்களும் விசாரணைக்கு ஆஜராகச் செய்தனர். 195 நபர்களும் கோர்ட்டில் ஆஜராகியும் எந்த பலனும் இல்லை. ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தித்து, சுமார் 7 கோடி ரூபாயை மோசடி செய்த ராஜசிவப்பிரகாசம் என்பவரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார். இவர் அதிமுக பிரமுகர் என்றும் சொல்லப்படுகிறது.