ADVERTISEMENT

இந்த 4 பேரில் யாரோ ஒருவர்தான் அவரை கடத்தியிருக்க வேண்டும்: முகிலன் மனைவி...

12:54 PM Feb 20, 2019 | jeevathangavel

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன். ஆரம்ப காலக்கட்டத்தில் புரட்சிகர இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டு பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர் முகிலன். பிறகு சில வருடங்களுக்கு முன்பு கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து கூடங்குளம் சென்ற முகிலன், அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நிர்வாகியாக பங்கு பெற்று வந்தார்.

ADVERTISEMENT

இவர் மீது ஏராளமான வழக்குகளை காவல்துறை போட்டுள்ளதோடு, ஒரு வருட காலம் சிறையில் இருந்துள்ளார். இந்த நிலையில்தான் முகிலன் கடந்த வெள்ளிக்கிழமை இரவில் இருந்து காணாமல் போயுள்ளார்.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திலும், பிறகு ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மணல் கடத்தலுக்கு எதிரான போராட்டம் என பல்வேறு போராட்ட இயக்கங்களில் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் முகிலன்.


சென்ற வாரம் தனது வீட்டுக்கு வந்த முகிலன், அங்கிருந்து கிளம்பும்போது சென்னை சென்றுவிட்டு அங்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை காவல்துறை திட்டமிட்டே கொலை செய்துள்ளதை ஆதாரத்துடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அம்பலப்படத்துகிறேன் என்று கூறியவர், பிறகு சென்னையில் இருந்து மதுரை செல்வதாகவும் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

அந்த அடிப்படையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அவரது டாக்குமெண்டரியை சென்னை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். 13 பேர் கொலை திட்டமிட்டு செய்யப்பட்டது எனவும் ஆதாரத்துடன் குறிப்பிட்டார். பேட்டி முடித்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் இப்போது நான், அரசும், காவல்துறையும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு செய்த படுகொலையை அம்பலப்படுத்திவிட்டேன். இனி எனக்கு எதுவும் நடக்கலாம் என கூறிவிட்டுத்தான் சென்றுள்ளார்.

அதன் பிறகு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரயிலில் சென்றுள்ளார். ஆனால் அடுத்த நாள் முகிலன் மதுரை செல்லவில்லை. திடீரென முகிலன் கடத்தப்பட்டாரா? அப்படியென்றால் அவரை யார் கடத்தினார்கள் என பெரும் பரபரப்பு தமிழகம் முழுக்க சூழலியல் ஆதரவாளர்களிடம் எழுந்தது.

இந்த நிலையில்தான் முகிலனின் மனைவி திருமதி பூங்கொடியை அவரது சொந்த ஊரில் சந்தித்தோம். அப்போது அவர், என் கணவர் இந்த வாரம் வீட்டுக்கு வந்திருந்தார். சிறிது உடல்நிலை சரியில்லாமலும் இருந்தார். நான் அவரிடம் இப்படியே தொடர்ந்து அங்கும் இங்கும் ஏன் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள்? கொஞ்சம் ஓய்வெடுங்கள் என கூறினேன். அதற்கு அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக என்னிடம் உள்ள ஆதாரத்தை சென்னை சென்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டுவிட்டு அடுத்து ஒரே ஒரு வேலை பாக்கியிருக்கிறது. அது சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலைதான். அதற்கு பேரறிவாளன் தாயார் உள்பட சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தினரை ஒன்றிணைத்து அவர்களை மக்கள் முன்பு பேச வைப்பதுதான். அதற்கான வேலைக்குத்தான் மதுரைக்கு செல்கிறேன். ஏழு பேர் விடுதலையான பிறகு அதிக நாள் வீட்டில் இருப்பேன் என்று கூறினார். அதன் பிறகு சென்ற அவர் மதுரைக்கும் போகவில்லை.

மதுரையில் இருந்து தோழர்கள் தொலைபேசியில் கூறியபோதுதான் தெரியும். அதன்பிறகு சென்னையில் தோழர்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அதற்கு நீதிமன்றம் 22ஆம் தேதிக்குள் எனது கணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் சொல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. எனது கணவருக்கு தனிப்பட்ட எந்த பகையும் இல்லை. அவருக்கு எதிரி என்றால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், மணல் மாபியாக்கள், இந்த அரசாங்கம், அடுத்து போலீஸ்தான். இந்த நான்கு பேரில் யாரோ ஒருவர்தான் அவரை கடத்தியிருக்க வேண்டும். அவரது உயிருக்கு இந்த நான்கு பேர்தான் உத்திரவாதம். மற்றப்படி தனிப்பட்ட எந்த பிரச்சனையும் அவருக்கு இருந்ததாக எனக்கு முழுமையாக தெரியவில்லை. அதேபோல் அவர் நிச்சயம் தலைமறைவாக எந்தக் காரணத்திற்காகவும் இருக்க மாட்டார்.

நீதிமன்றத்தில் போலீசார் அவரை ஆஜர்படுத்தவில்லை என்றால், எதாவது விபரீதம் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் எங்களுக்குள் எழுந்துள்ளது என கூறினார் பூங்கொடி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT