MUCORMYCOSIS TAMILNADU GOVERNMENT DOCTORS EXPERT TEAM PRESS MEET

Advertisment

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் கருப்பு பூஞ்சைப் பாதிப்பு தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு தலைமையிலான தமிழக அரசின் மருத்துவ நிபுணர்கள் குழு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தது.

அப்போது பேசிய மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, "தமிழகத்தில் இதுவரை 400 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண், மூக்கு, மூளையில் ஏற்படும் பாதிப்புகள் கருப்பு பூஞ்சைக்கான அறிகுறிகள். கரோனா வருவதற்கு முன்பிருந்தே கருப்பு பூஞ்சைபாதிப்பு இருக்கிறது; இது புதிய நோய் அல்ல. கருப்பு பூஞ்சை தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கருப்பு பூஞ்சைத் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது" என்றார்.

Advertisment

அதைத் தொடர்ந்து பேசிய தமிழக அரசின் குழுவில் உள்ள இ.என்.டி. வல்லுநர் மோகன் காமேஸ்வரன், "கரோனா பாதிப்பே உருமாறி கருப்பு பூஞ்சையாக மாறுகிறதா எனக் கண்டறிய வேண்டியுள்ளது. கரோனாவின் முதல் அலையில் யாருக்கும் கருப்பு பூஞ்சைகண்டறியப்படாததால் சந்தேகம் ஏற்படுகிறது. மூக்கடைப்பு, முகத்தில் வலி இருந்தால் அருகிலுள்ள காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணரை அணுகலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் கருப்பு பூஞ்சை நோயைக் குணப்படுத்திவிடலாம். கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 75% பேர் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை அளவை சரியான அளவில் நிர்வகிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.