Skip to main content

23 ஆண்டுகளாக வசித்துவரும் கிண்டி தொழிலாளர் குடியிருப்பு ஆக்கிரமிக்கப்பட்டதல்ல! மா. சுப்பிரமணியன் விளக்கம்

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

 

 கிண்டி தொழிலாளர் குடியிருப்பு விவகாரம் குறித்து சென்னை மாநகர முன்னாள் மேயரும், தற்போதைய சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் அளித்துள்ள விளக்கம்:

 
’’நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன் 1996ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் கிண்டி தொழிலாளர் குடியிருப்பு வீட்டை சிட்கோ நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்து, அந்த வழக்கில் நீதிமன்றம் வழக்கின் உண்மைத் தன்மைகளுக்கு உள்செல்லாமல் சட்டபடி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முதல் பிரதிவாதி சிட்கோ மேலாண்மை இயக்குநர் மற்றும் சிட்கோ அதிகாரிகள்தான்.  இதற்கான சட்டப்பூர்வமான பதிலையும், விளக்கத்தையும் முதல் ஐந்து பிரதிவாதிகளாகிய அரசு அதிகாரிகள் விசாரணையில் தெரிவிப்பார்கள். விசாரணை முடிவை மற்றவர்களைப்போல் நாங்களும், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.   

 

m

 தமிழகத்தில் மொத்தம் பத்து மாவட்ட தொழிற்பேட்டைகளில் பணிபுரிந்துவரும் நலிந்த தொழிலாளர்களுக்கு கட்டப்பட்ட மொத்தக் குடியிருப்புகள் 1,079. இவையனைத்தும் 21-8-1957ஆம் ஆண்டு தொழிலாளர்களுக்கான மலிவு விலை வீட்டு வசதித் திட்டம் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளாகும். இவையனைத்தும் அந்தந்த தொழிற்பேட்டையில் அமைந்திருந்த தொழிற்சாலைகளின் மூலமாக மாத வாடகை ரூ.5 என்றும், பின்னர் ரூ.11 என்றும் வசூலிக்கப்பட்டு வந்தது.

 

1972ஆம் ஆண்டு வரை சிட்கோ நிர்வாகம் அந்தக் குடியிருப்புகளை எல்லாவிதமான பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டு வந்தது. பின்னர் எந்தவிதமான பராமரிப்புமின்றி இக்குடியிருப்புகள் அனைத்தும் 1974 முதல் சிட்கோ நிர்வாகம் பராமரிப்பை கைவிட்டுவிட்டது. 1974 முதல் இக்குடியிருப்புகள் அனைத்தையும் குடியிருப்பவர்களுக்கே உரிமையாக்கி தரவேண்டுமென்ற கோரிக்கையை கிண்டி தொழிற்பேட்டை, தொழிலாளர் குடியிருப்பு பொதுநலச் சங்கத்தின் வாயிலாக அந்தந்த ஆட்சிக் காலங்களில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் வாயிலாக சட்டசபையிலும் எடுத்துரைக்கப்பட்டு வந்தது. அதுமுதல் பல்வேறு அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

 

அரசாணைகளின் விவரம்   

1)   அரசு ஆணை நிலை எண்.971 வி.வ. (ம) ந.வ. நாள் : 15-07-1987

2)   அரசு ஆணை நிலை எண்.1611, வி.வி. (ம) ந.வ. நாள் : 9-12-1988

3)   அரசு ஆணை நிலை எண்.1074, வி.வ. (ம) ந.வ. நாள் : 9-11-1989

4)   அரசு ஆணை நிலை எண்.249, வி.வ. (ம) ந.வ. நாள் : 22-2-1991

5)   அரசு ஆணை நிலை எண்.691, வி.வ. (ம) ந.வ. நாள்: 10-08-1993

       பின்னர் தலைவர் கலைஞர்  முதல்வரானதும் அரசு ஆணை நிலை எண்.128 நாள்: 24-3-1997 அன்று சட்டமன்றத்தில் தாயுள்ளத்துடன் தொழிலாளர் குடியிருப்புத்தாரர்களின் கோரிக்கைகளை பரிசீலனைச் செய்து ஒரு குடியிருப்பின் விலை ரூ.9,600 என்ற மலிவு விலையில் வழங்கலாம் என்று ஆணைப் பிறப்பித்து விற்பனைப் பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கிண்டி தொழிற்பேட்டையில் மொத்தம் உள்ள வீடுகள் எண்ணிக்கை 406. இதில் டான்சி குடியிருப்புகள், மின்சார வாரிய குடியிருப்புகள், சிட்கோ தொழிலாளர்கள் குடியிருப்புகளும் அடங்கும். 

 

சிட்கோ நிலம் எங்கள் குடும்பத்தினர் பெயருக்குப்  மாற்றப்படவில்லை. விற்பனைப் பத்திரம் சிட்கோவினால் வழங்கப்படும்வரை அந்நிலம் சிட்கோவிற்கு மட்டுமே சொந்தமானது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சொத்து விவர பிரமாணப் பத்திரத்திலும் (Affidavit) இதையே தெரிவித்துள்ளேன். உண்மை இப்படியிருக்க, கடந்த சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போதும் இதே வீட்டுப்பிரச்சினையை பூதாகரமாக்கி, வாரப் பத்திரிகைகளில் அட்டை செய்தியாக வெளியிட வைத்து ஆயிரக்கணக்கானப் பிரதிகளை இலவசமாகத் தொகுதி முழுவதும் வழங்கினார்கள். இதை தனிப்பட்ட சுயேட்சை வேட்பாளர் நண்பர் பார்த்திபன் செலவு செய்திருக்க வாய்ப்பில்லை. அரசியல் எதிரிகளின் பொய்ப்பிரச்சாரத்தை பொதுமக்கள் புறம்தள்ளிவிட்டார்கள். வழக்கு தொடர்ந்த பார்த்திபன் பெற்ற வாக்குகள் 87 மட்டுமே.

 

 அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மட்டுமே தேவைப்படும்போது இந்த ஒரேப் பிரச்சினையை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இதேப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி இதே நண்பர் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு (Election Petition 10 of 2016) ஒன்றினைத் தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த நீதியரசர் கலையரசன் வழக்கைத் தள்ளுபடி செய்தார். (Order dated 6-4-2018)  

 

இதற்கிடையில் 2008ஆம் ஆண்டு எங்களை போல் பத்தாண்டுகளுக்கு குடியிருப்பவர்களை முறைப்படுத்த, சிட்கோ விண்ணப்பங்களை கேட்டுப் பெற்றுள்ளது. இதேப் போன்ற விவரங்களை 2018 டிசம்பர் மாதமும் சிட்கோவால் அனைத்து குடியிருப்புத்தாரர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

 

தலைவர் கலைஞர் அவர்களால் ரூ.9600 என்று வழங்கப்பட்ட மலிவு விலைக்கு மாறாக புதுத்தொகை ஒன்றினை நிர்ணயிக்க அரசு பரிசீலனையில் உள்ளது. இதேபோல் கிண்டி தொழிலாளர் குடியிருப்பில் மட்டும் 94 குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களின் நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளதென உயர்நீதிமன்ற வழக்கு எண்.10939/2018-இல் சிட்கோ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 94 குடியிருப்புத்தாரர்களையும் விசாரணை செய்து விவரங்களை தர வேண்டுமென்று சி.பி.சி.அய்.டிக்கு புகார் செய்யப்பட்டுள்ளதென சிட்கோ தனது மேற்படி பிராமணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. இது இப்படியிருக்க நண்பர் பார்த்திபன், எங்கள் மீது மட்டும் ஒரு புகார் மனுவை கிண்டி காவல் நிலையத்தில் அளித்து, அது சி.பி.சி.அய்.டிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. எம்மீது களங்கத்தை ஏற்படுத்தி, எப்படியாவது என்னை கைது செய்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் ஆளுங்கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

 

நாங்கள் இப்போதும், அடிமனைச் சொந்தமில்லாத தொழிலாளர் குடியிருப்பில்தான் வசித்து வருகிறோம். இதில் மோசடி செய்வதற்கோ, பொய் ஆவணங்களைத் தயாரிப்பதற்கோ, ஆக்கிரமிப்பு செய்வதற்கோக எந்தவிதனமான முகாந்திரமும் இல்லை. தொடர்ந்து அடிமனையைத் தவிர்த்து, அவரவர் குடியிருக்கின்ற குடியிருப்புகளுக்கு ஏற்றாற்போன்று மாநகராட்சி சொத்து வரி, குடிநீர் வரி முதலியவற்றை 2001ஆம் ஆண்டு முதல் நாங்கள் அனைவரும் செலுத்தி வருகின்றோம்.

 

கிண்டி தொழிற்பேட்டை தொழிலாளர் குடியிருப்பைப் போல தமிழ்நாடு முழுவதும் மேற்கூரை உரிமையை ஆயிரக்கணக்கானார்கள் மாற்றிக் கொடுத்து உள்ளனர். இதேப் போன்ற கோரிக்கைகள் குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் மற்றும் பொதுப்பணித்துறையில் குடியிருப்புகளில் வசிக்கும் இலட்சக்கணக்கானவர்களுக்கும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

 

உண்மைகள் இவ்வாறு இருக்க தொடர்ந்து அரசியல் ஆதாயத்திற்காக இச்செய்தியை பூதாகரமாக்கிக் கொண்டிருக்கின்றனர். பார்த்திபன் தொடுத்திருக்கிற இவ்வழக்கு சட்டரீதியான உண்மை நிலைகளை ஊருக்கு வெளிப்படுத்திட எனக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.  அதற்காக பார்த்திபன் அவர்களுக்கும், அவருக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருப்பூர் சுப்பிரமணியன் தியேட்டருக்கு நோட்டீஸ்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

tirupur subramaniam special shows issue

 

கடந்த தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்த ஜப்பான், ராகவா லாரன்ஸின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', விக்ரம் பிரபுவின் 'ரெய்டு', சல்மான் கானின் 'டைகர் 3' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின. இதில் தமிழகத்தில் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழு சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டதால் தமிழக அரசு ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 1.30 மணிக்கு முடிக்க அனுமதி வழங்கியது. அதன்படி காட்சிகள் திரையிடப்பட்டது. 

 

ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனுக்கு சொந்தமான, திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், சல்மான் கானின் 'டைகர் 3' படம் அரசு அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. இதன் அடிப்படையில், அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தினர். அப்போது அனுமதியின்றி 6 சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது தெரிய வந்துள்ளது. 

 

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு திரையரங்க உரிமையாளருக்கு மாவட்ட கலெக்டர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

 

 

Next Story

விக்கிரவாண்டியில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்!!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ளது. கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் போட்டி போட்டு கொண்டு பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். 
 

vikkiravandi election propaganda by subramaniyan



இந்நிலையில் திமுக சார்பில் இன்று அன்னியூரில், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் நா.புகழேந்திக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.


இவருடன் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மாவட்ட அவைத்தலைவர் 
எஸ்.குணசேகரன், கோல்டு டி.பிரகாஷ், அன்னியூர் ஊராட்சி செயலாளர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.