/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_543.jpg)
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்த்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கான தொடண்டர்கள் குவிந்து விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய எம்.எஸ்.பாஸ்கர், “என்மேல் அதிக அக்கறைகாட்டியவர் அண்ணன் விஜயகாந்த். நிறையப் படங்களுக்கு எனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கார். நான் இப்போது வைத்திருக்கும் நடிகர் சங்க கார்டு அண்ணன் கொடுத்தது. சாப்பாடு அண்ணன் போட்டது; மரத்தடியில் தூங்கவச்சு அழகு பார்த்தார். இப்படி இருக்கனும் பாஸ்கரா.. அப்படி இருக்கனும் பாஸ்கரா..ன்னு நிறைய அறிவுரைகளை கூறியிருக்கிறார். எப்போ அவர் வீட்டுக்கு போனாலும்; முதலில் சாப்டியான்னு தான் கேட்பார்; கொஞ்சம் தயங்கினாலும் முதலில் போய் சாப்பிட்டு வா, அப்போதான் நான் பேசுவேன் என்று கூறி சாப்பிட வைப்பார்; ஆனால் இனி யார் சாப்டியான்னு கேட்கபோறா.. எங்க அண்ணன இனி எந்த ஜென்மத்தில் பார்க்கபோறோம் என்று தெரியவில்லை. நான் ஏற்கெனெவே சொன்ன மாதிரி விஜயகாந்த் என் அண்ணன் மட்டுமில்ல; எனக்கு சோறுபோட்ட தாய். கம்பீரமா பார்த்துட்டு எங்க அண்ணன இப்படி அமைதியா படுத்திருக்கிறதபார்க்கும் போது நெஞ்சே வெடிச்சிரும் போலிருக்கு” என்று கதறி அழுதார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)