/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/165_40.jpg)
சிதம்பரம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சிதம்பரம் - கடலூர் புறவழிச் சாலை பகுதியில் லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட நகராட்சி புல் பண்ணை இருந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பேருந்து நிலையம் அமைக்க ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்துபுதிய பேருந்து நிலைய அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். சிதம்பரம் நகராட்சி தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல்லை எடுத்து வைத்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்தப் பேருந்து நிலையம் 50 பேருந்துகள் நிற்கும் வகையிலும் 3367 சதுர மீட்டர் பரப்பளவில் 18 மாதங்களில் பணிகள் முடிக்கப்படவுள்ளன. இதில் 52 கடைகளும், ஒரு உணவகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, போக்குவரத்து கழகங்களுக்கான தனித்தனி அறைகள், ஏடிஎம் பணம் எடுக்கும் வசதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் நவீன முறையில் அமைய உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் உதவியாளர் ஸ்வேதா சுமன், வட்டாட்சியர் செல்வக்குமார், திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், திமுக நகர துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மூசா, நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகர் மன்ற உறுப்பினர் தஸ்லிமா, திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)