தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், மு. சண்முகம், என். சந்திரசேகரன், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன் மற்றும் வைகோ ஆகிய 6 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்றுடன் (24.07.2025) முடிவடைந்தது. முன்னதாக இந்த காலி பதவியிடங்களுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திமுக சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் மற்றும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதேபோல் அதிமுக கூட்டணியில் இன்பதுரை, தனபால் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். இதனையடுத்து இந்த 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி ஏற்க உள்ளனர். இன்று (25.07.2025) காலை 11 மணிக்கு அவை கூடியதும் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அதே சமயம் அதிமுக உறுப்பினர்களான இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய இருவரும் வரும் திங்கட்கிழமை (28.07.2025) பதவி ஏற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக பதவியேற்க டெல்லி செல்வதற்காகச் சென்னை விமான நிலையத்திற்கு கமல்ஹாசன் நேற்று வந்திருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “மக்களின் வாழ்த்துக்களுடன் உறுதிமொழி எடுக்கவும், என் பெயரைப் பதிவு செய்யவும் செல்கிறேன். இந்தியனாக எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதையும் கடமையும் நான் செய்யப்போகிறேன் என்பதை ஒரு பெருமையோடு தான் சொல்லிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். அப்போது செய்தியாளர், “மாநிலங்களவையில் கன்னிப் பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும்” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “அது பற்றி இப்போது சொல்லக்கூடாது. அங்கே தான் பேசவேண்டும். சில விஷயங்கள் இங்கே பேசுகிற மாதிரி அங்கே பேசக்கூடாது. அங்க பேசுகிற மாதிரி இங்கே பேசக்கூடாது” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.